ஜூன் 12, 2010 அன்று தமிழ் நாடு அறக்கட்டளையின் ஜார்ஜியா பிரிவும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கமும் இணைந்து மில்டன் மையம், ஆல்ஃபரெட்டாவில் ஒரு மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்னையிலிருந்து பிரபல லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவுடன், திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் கிருஷ், மஹதி, மாலதி, TMS செல்வகுமார் ஆகியோர் இதனை வழங்கினர்.
அறுபதுகளில் வெளியான பழம்பாடல்கள் முதல் புத்தம்புதுப் பாடல்கள் வரை கலந்து வழங்கியமை அனைத்துத் தரப்புப் பார்வையாளர்களையும் மகிழ்வித்தது. நடனப் பிரியர்களுக்காக ‘மன்மத ராசா’ போன்ற குத்துப் பாடல்கள் உற்சாகமாக ஒலித்தன..
திருவையாறு சேகர் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் ‘அதிசய ராகம்’ பாடலைப் பாடிப் பரவசப் படுத்தினார். இசைக்குழுவைச் சேர்ந்த துரை ‘சங்கீத ஜாதி முல்லை’ பாடலைப் பாட அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. யாரும் எதிர்பாராத தருணத்தில் சுரேந்தர் தனது டிரம் திறமையை அவிழ்த்துவிட அரங்கமே அதிர்ந்தது. நிகழ்ச்சியின் இடையே லக்ஷ்மன் தனது பலகுரல் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை சிரிப்பலைகளில் ஆழ்த்தினார். இறுதியாக அனைத்துப் பாடகர்களும் கேட்போரின் விருப்பப் பாடல்களை பாடி அசத்தினர். TM செல்வகுமார், தந்தை டி.எம்.எஸ்ஸின் பழைய பாடல்களையும், கிருஷ் மற்றும் மஹதி புதுப் பாடல்களையும், பலரின் குரல்களில் பாடல்களை மாலதியும் பாடியதில் ஐந்தரை மணிநேரம் போனதே தெரியவில்லை. உள்ளூர்ப் பாடகர் ஸ்ரீநாத், கீபோர்ட் வாசித்த அஷ்வின் ஆகியோரின் திறமை மெச்சத் தக்கது.
நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதி தமிழக கிராமங்களில், வசதியின்மை காரணமாக கல்வியை கைவிட்ட குழந்தைகளை மறுபடியும் பள்ளிகளுக்கு அனுப்பும் தமிழ் நாடு அறக்கட்டளையின் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்.
மணவாளன், அட்லாண்டா, ஜார்ஜியா. |