தமிழ் திரையுலகில் ஒளிர்ந்து மறைந்த நட்சத்திரங்களின் மத்தியில் நடிப்பையும் கடந்து மனிதநேயத்துடன் வாழ்ந்த சில நல்ல மனிதர்களில் ஒருவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். கடந்த முப்பத்தொன்பது ஆண்டுகளாக லாஸ் ஏஞ்சலஸில் வசித்துவருகிறார் அவரது மகள் திருமதி. கஸ்தூரி. கலைவாணர் என்று சொன்னதுமே அவரது கண்கள் பளிச்சிடுகின்றன. "எங்கப்பாவை ஒரு பெரிய கலைஞர் என்று சொல்வதைவிட அவர் மனிதநேயம் மிக்கவர் என்பதையே பெருமையாகக் கருதுகிறேன்" என்கிறார். எத்தனையோ குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த கலைவாணரின் வாழ்க்கையில் நமக்கு தெரியாத பக்கத்தை தென்றல் வாசகர்களோடு அவர் பகிர்ந்துக்கொள்கிறார்.
கலைவாணர் 1908 ஆம் ஆண்டு நாகர்கோயில், ஒழுகினசேரியில் சுடலைமுத்து மற்றும் இசக்கியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். 15 ஆம் வயதில் நடிப்புலக வாழ்வைத் துவங்கினார். T.A.மதுரம் நடித்த படப்பிடிப்பு ஒன்றை வேடிக்கை பார்க்கப் போன இடத்தில் நடிக்க வரவேண்டியவர் வராமல் போகவே தானே நடிகர் ஆனார். திரையில் ஜோடி சேர்ந்தவர்கள் பின் வாழ்கையிலும் இணைந்தனர்.
கலைவாணர் தன் ஓய்வு நேரத்தை எப்போதும் குழந்தைகளுடன் வீட்டு மாடியில் கழிப்பது வழக்கம். நேரம் கிடைக்கும்போதெல்லாம், குழந்தைகளை மாடிக்கு வரச்சொல்லி கதை சொல்வது, புதிர் சொல்லி விடை கேட்பது, நகைச்சுவையாகக் கதை சொல்வது என்று நேரம் கழிப்பார். நன்றாகப் படமும் வரைவார்.
இவர்களைப் போன்ற தம்பதியினரைப் பார்ப்பதே அபூர்வம் என்று சொல்லும் அவர் மகள் தன் பெற்றோரின் படத்திற்குக் கீழே "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்ற குறளை எழுதி வைத்திருக்கிறார்.
கஸ்தூரி சற்றே தன் நினைவுகளைப் பின்னோக்கிச் செலுத்துகிறார்.
என் தந்தை கலைவாணர் தன் ஓய்வு நேரத்தை எப்போதும் குழந்தைகளுடன் வீட்டு மாடியில் கழிப்பது வழக்கம். நேரம் கிடைக்கும்போதெல்லாம், குழந்தைகளை மாடிக்கு வரச்சொல்லி கதை சொல்வது, புதிர் சொல்லி விடை கேட்பது, நகைச்சுவையாகக் கதை சொல்வது என்று நேரம் கழிப்பார். நன்றாகப் படமும் வரைவார்.
இறுதி நாட்களில் மருத்துவமனையில் இருந்த போதும் தன் குழந்தைகளுடன் சிரித்துக் கதை சொல்லி நேரத்தைச் செலவழித்தார்.
ஒருமுறை அறிஞர் அண்ணா எம்.பி. தேர்தலில் நின்றபோது அவரை எதிர்த்து ஒரு மருத்துவர் தேர்தலில் நின்றார். அண்ணாவுக்குப் பிரசாரம் செய்யச் சென்றிருந்த கலைவாணர் என்.எஸ்.கே. மேடையேறி "மகா ஜனங்களே! இங்கே அண்ணாதுரையை எதிர்த்து நிற்கும் மருத்துவர் ஒரு நல்ல ராசியான மருத்துவர்; ஜனங்களுக்காக அவர் அனாதை விடுதி கட்டியுள்ளார். எல்லோருக்கும் சிறந்த முறையில் வைத்தியம் செய்கிறார், பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்" என்று சொல்லிக்கொண்டே போக அண்ணா உட்பட மொத்தக் கட்சியாளர்களும் அவரைக் குழப்பத்துடன் பார்க்க, இறுதியில் "இவ்வளவு நல்ல மருத்துவரை காஞ்சீபுரத்திலேயே வச்சுக்காம ஜெயிக்க வச்சு டெல்லிக்கு அனுப்பலாமா?" என்று முடித்தாராம். அவரது நகைச்சுவை உணர்வை அண்ணா வெகுவாகப் பாராட்டினாராம்.
"வீட்டுக்கு ராஜாஜி வந்திருந்தபோது எங்கம்மா போட்ட டீ ரொம்ப நல்லா இருக்குதுன்னு பாராட்டினாராம். உடனே அப்பா சமயோசிதமா "அவ டீயே (T.A) மதுரம்" என்றாராம்.
"சிரிப்பு, இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு" என்ற பிரபலமான பாடலை அவர் பாடுகையில் செட்டில் உள்ள யாராவது ஒருவராவது சிரித்து விட, 28 முறை டேக் எடுக்க வேண்டி வந்தது என்கிறார் கஸ்தூரி.
பெண் விடுதலை, பெண் கல்வி ஆகியவை தொடர்பான பாடல்களைத் தன் திரைப்படப் பாடல்களில் சேர்க்கச்சொல்லி பல கருத்து மிகுந்த பாடல்களை மக்களிடையே கொண்டு சென்றுள்ளார்.
"பாரத நாட்டுப்பெண்கள் நல்ல பகுத்தறிவுள்ள கண்கள்"
"நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி தாய் நாட்டின் நாகரீகம் பேணி நடப்பவள் எவளோ அவளே நல்ல பெண்மணி"
ஆகிய பாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
கலைவாணர் தன்னுடன் பணியாற்றிய அனைவரையும் சமமாக பாவித்தார். தான் எடுத்த 'மணமகன்' திரைப்படத்தில் பணியாற்றியோர் பெயர்கள் காண்பிக்கையில், லைட் பாய் முதற்கொண்டு அனைவரின் புகைப்படத்தையும் காண்பித்தார்.
"பக்த நாமதேவன் என்ற திரைப்படம் தோல்வியடைஞ்சு, அதன் தயாரிப்பாருக்குப் பெரிய நஷ்டம். அவர் மனமுடைந்து போனார். அதைக் கேள்விப்பட்ட அப்பா அன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்களான வி.கே. ராமசாமி, பாலையா, சி.எஸ். பாண்டியன் இன்னும் பலரை வச்சு நகைச்சுவைக் காட்சிகளைத் தயாரிச்சு படத்துல சேர்த்து, மீண்டும் வெளியிட்டார். படம் ஓஹோன்னு ஓடிச்சு. இது திரைப்பட வரலாற்றில் யாரும் செய்து காட்டாத ஒரு அபூர்வமான உதவி" என்று நெகிழ்வோடு நினைவுகூருகிறார் கஸ்தூரி.
அதன் தயாரிப்பாளர் பின்னர் நிறையப் பணத்தைக் கலைவாணருக்குக் கொடுத்து தந்து நன்றி கூற, ஏற்க மறுத்த கலைவாணர் "பணத்துக்காக இதைச் செய்யலை. என்னைப் போலத் திரைப்படத்துறை சார்ந்த ஒருவர் எல்லாவற்றையும் இழந்து நிற்கக்கூடாது என்ற எண்ணத்தில் செய்தேன்" என்று சொல்லி விட்டார்.
என்றைக்கு யாருக்கும் நான் உதவ முடியாமல் போகும் நிலைமை வருகிறதோ அன்றைக்கு நான் உயிரோடு இருக்கக்கூடாது என்று அடிக்கடி சொன்ன அவர் அதேபோலவே வாழ்ந்தும் முடித்தார் என்கிறார்.
கலைவாணரின் இறுதி நாட்களில் யார் யாரோ வந்து "கலைவாணர் எங்கள் குடும்பத்திற்கு உதவி செய்தார்; எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்; மருத்துவ உதவி செய்தார்" என்றெல்லாம் சொன்னார்கள்.
என்றைக்கு யாருக்கும் நான் உதவ முடியாமல் போகும் நிலைமை வருகிறதோ அன்றைக்கு நான் உயிரோடு இருக்கக்கூடாது என்று அடிக்கடி சொன்ன அவர் அதேபோலவே வாழ்ந்தும் முடித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாட்களில் தண்ணீர் அருந்த வெள்ளிக் கூஜா ஒன்றை உபயோகித்து வந்தார். ஒருநாள் அது காணாமல் போகவே எல்லோரும் தேடத் தொடங்கினார்கள் "அதை யாருக்காவது தானமாகக் கொடுத்திருப்பார். தேட வேண்டாம்" என்று அம்மா சொன்னார்கள். அதுபோலவே மருத்துவமனையில் பாதுகாப்புக் காவலரின் மகள் திருமணத்திற்குப் பண நெருக்கடி என்று கேள்விப்பட்டு, அவருக்கு அந்த வெள்ளிக்கூஜாவை தந்துவிட்டதாகப் பின்னர் தெரியவந்ததாம்.
"அப்பாவின் தான தர்மத்திற்கு மதுரம் அம்மா ஒருநாளும் தடையாக இருந்ததில்லை. அவர்களுக்குப் பிறந்த ஒரே குழந்தையும் பல மாதங்கள் கழித்து இறந்துவிட்ட நிலையில், தன் தங்கையைத் திருமணம் செய்து வைத்து அவர்மூலமாகப் பெற்ற குழந்தைகளைத் தன் பிள்ளைகள் போலவே அன்பு செலுத்தி வளர்த்தார். மட்டுமன்றி கலைவாணர் பால்யவிவாகம் செய்த பெண்ணையும் ஊரிலிருந்து அழைத்து வந்து தம்முடனேயே வைத்து அன்புடன் பராமரித்தார்.
"வாழ்க்கையில் வசதிகளை இழந்தபோதும், எந்தக் காலகட்டத்திலும் எங்கள் தந்தையின் பெயரைச் சொல்லிப் பயன்பெற முயன்றதில்லை" என்கிறார் கஸ்தூரி. ஆனால், "மழை பெய்தால் யாரோ மூன்றாவது மனிதர் வந்து குடைபிடிப்பார்கள்.பெற்றவர்கள் செய்த தருமம் பிள்ளைகளைக் காக்கும் என்பது மிகப்பெரிய உண்மை" என்கிறார்.
"வசதி உள்ளபோதே பணத்தைக் கொடுத்துக் கெடுக்காமல், நல்ல பண்புகளை மட்டுமே கற்றுத் தந்து வளர்த்தார்கள், அவர்கள் வாழ்க்கை எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டிப் பாடம்" என்று சொல்லி மீண்டும் 'அன்பும் அறனும் உடைத்தாயின்' என்ற குறளை நினைவு கூர்ந்தார் கஸ்தூரி.
தொகுப்பு: நித்யவதி சுந்தரேஷ் |