AICCE குழுவின் இசை விருந்து
மார்ச் 13, 2010 அன்று British Academy of Performing Arts அரங்கில் AICCE என்னும் அட்லாண்டாவின் புதிய இசைக்குழுவினர் இசைநிகழ்ச்சி ஒன்றை வழங்கினர். திரு சி.வி. சுப்ரமண்யன், அவரது மனைவி திருமதி காயத்ரி சுப்ரமண்யன் இருவரும் உள்ளூர் இசை, வாத்தியக் கலைஞர்களை ஒன்றிணைத்து AICCE (Atlanta Indian Community Choir & Ensemble) என்ற இசைக்குழுவை உருவாக்கியுள்ளனர். சி.வி. சுப்ரமண்யன் சிறந்த வயலின், வாய்ப்பாட்டு வல்லுநரும், இசையமைப்பாளரும் ஆவார். காயத்ரி சுப்ரமண்யன் அட்லாண்டாவில் சௌந்தர்ய நாட்யாலயா என்ற நடனப்பள்ளியை நடத்தி வருகிறார்.

நிகழ்ச்சியின் முதல் பகுதி கர்நாடக சங்கீதக் கச்சேரியாக அமைந்தது. தீபா ஸ்ரீராம், காயத்ரி கிருஷ்ணன், காயத்ரி வஸந்த், ஹேமா நாகேந்த்ரா, ராமன் போயபாக்கம், ஸ்ரீ நித்யா கிருஷ்ணன் முதலியோர் சிறப்பாகப் பாடினர். தொடர்ந்து காயத்ரி சுப்ரமண்யன், கண்ணன் ராஜப்பா பக்திப் பாடல்களைப் பாடினார்கள். அபர்ணா பெல்லூர் கிடாரிலும், ராம் மல்லப்பா புல்லாங்குழலிலும் இசை வழங்கினார்கள். குருஸ்வாமியும், சந்தோஷ் சந்துருவும் மிருதங்கம் வாசித்தனர். இதனைத் தொடர்ந்து AICCE இசைக்குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. கர்நாடக சங்கீத, ஹிந்துஸ்தானி சங்கீத ராகங்களின் பல்வேறு பிரிவுகளை புதுமையாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டன.

AICCEயின் நிர்வாக இயக்குநர் சி.வி.சுப்ரமணியன் நிகழ்ச்சிக்கான ராக வடிவங்களை அற்புதமாகத் தொகுத்து, பயிற்றுவித்து, இசை வழங்கினார். பங்கேற்ற அனைவரும் அட்லாண்டாவில் இசை வகுப்புகளை நடத்தி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1982 ASIAD விளையாட்டுக்கள் நடந்த சமயத்தில் பாடப்பட்ட 'ஸ்வாகதம் சுப ஸ்வாகதம்' என்ற பாடலை சி. சுப்ரமண்யன் மேலும் மெருகூட்டி இசையமைத்ததைக் குழுவினர் முதலில் பாடினார்கள். அடுத்தடுத்து நாகஸ்வராவளி, ஆபேரி ராகங்கள் பல்வேறு விதமாக இசைக்கப்பட்டன. புகழ்பெற்ற 'அலைபாயுதே' பாடல் ராகத்தின் ஏற்றத்தாழ்வுகளுடன் மிக அருமையாகப் பாடப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் ஆனந்த பைரவி மற்றும் காபி ராகத்தில் தமிழ்நாட்டு கிராமிய மெட்டில் பாடலைப் பாடினார்கள்.

ராதா ராமஸ்வாமி,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com