மே 1, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம், சித்திரை விழாவை கீஃப் தொழில்நுட்பப் பள்ளி, பிரேமிங்ஹாமில் சிறப்பாகக் கொண்டாடியது. நிகழ்ச்சிக்கு பேரா. R. சுப்பிரமணிய அய்யர் (Retd Dean of Academic Programs, IIT Mumbai, visiting faculty, MIT and Tufts) சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். விழாவை NETS தலைவர் திருமதி வித்யா கல்யாணராமன் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் வரவேற்புரையுடன் தொடங்கி வைத்தார்.
முதல் நிகழ்ச்சியாக 'திருமணத்திற்குப் பிறகு அதிகம் மாறுவது ஆணா? பெண்ணா?' என்ற தலைப்பில் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. திருமதி. செல்வநாயகி மயில்சாமி நடுவராக இருந்து கலகலக்கச் செய்தார். ஸ்ரீனிவாசன் கிருஷ்ணமுர்த்தியின் தலைமையில் ஆர்த்தி கிருஷ்ணகுமார், லதா கிருஷ்ணசுவாமி, பிரேமலதா முரளி, கஸ்தூரி கோபாலரத்தினம் ஆகியோர் பெண்களே என்று வாதிட்டார்கள். எதிரணியில் ஆண்களே எனச் சரவணன் சிதம்பரம், கிருஷ்ணகுமார் வேல்முருகன், பமீலா வெங்கட், ராதா நாராயணன் ஆகியோர் அண்ணாமலை வேல்முருகன் தலைமையில் வாதிட்டார்கள்.
தொடர்ந்து, 'நினைத்தாலே இனிக்கும்' இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதிகள் பிரியா ஆனந்த், உமா ஷங்கர் தலைமையில் நியூ இங்கிலாந்து பாடகர்கள் இசை நிகழ்ச்சியை வழங்கினார்கள். 'மார்கழி பூவே' என்ற இனிய பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 'கண்கள் இரண்டால்', 'காற்றில் வரும் கீதமே', 'தத்தித்தோம்' என வரிசையாகப் பாடல்களின் அணிகுப்பு இன்ப வெள்ளத்தில் கேட்டோரை மூழ்கடித்தது. 'என்னம்மா கண்ணு சௌக்கியமா', 'இளமை இதோ இதோ', 'ஒ போடு' முதலிய பாடல்கள் நிஜமாகவே ஓ! போட வைத்தன. திருமதி. ஸ்ரீலட்சுமி வாசன் 'சின்ன சின்ன ஆசை' பாடலை நடனம் ஆடியபடிப் பாடியது மேலும் சுவை கூட்டியது.
நிகழ்ச்சியை திருமதிகள் மலர் செந்தில், அபர்ணா கிருஷ்ணமூர்த்தி தொகுத்து வழங்கினார்கள். திரு. ராஜ் வேல்முருகன் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி நிறைவெய்தியது.
பூங்கோதை கோவிந்தராஜ், நேஷுவா, NH. |