மே 16, 2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 2 மணி முதல் 6 மணி வரை அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் – கலிபோஃர்னியா தமிழ்க் கழகம் சார்ந்த தமிழ்ப் பள்ளிகளின் முதலாம் ஆண்டு விழா இண்டிபெண்டன்ஸ் உயர்நிலைப்பள்ளியின் மில்டன் மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், ஆல்ஃப்ரட்டா, லில்பர்ன் மற்றும் ரிவர்டேல் தமிழ்ப் பள்ளிகளில் பயின்றுவரும் மணவ மாணவியர் தமது பெற்றோர் மற்றும் நணபர்களுடன் கலந்துகொண்டனர். தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் விழா துவங்கியது.
விழாவின் முதன்மை விருந்தினரான வடஜார்ஜியா கல்லூரியின் நவீன மொழித்துறை தலைவர் பேரா. டாக்டர் பிரையன் மேன் தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார், அவர் தன் சிறப்புரையில் மொழிகளின் அவசியம், பயன்பாடு குறித்துப் பேசியனார். 100 சதவிகிதம் வருகை புரிந்த மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினார். அமெரிக்கத் தொழில்துறையில் வளந்து வரும் தமிழ் ஆர்வலர்கள் திரு. மகா மஹாதேவன் (Boss Solutions), திரு. டி.கே. கணேஷ் (Scintel Technologies) மற்றும் திருமதி. காஞ்சனா ராமன் (Avion Systems) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்க செயற்குழுத் தலைவி திருமதி. இந்திரா பாலகிருஷ்ணன் ஜார்ஜியா தமிழ்ப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களைப் பாராட்டிப் பேசினார். சிறப்பு விருந்தினர்களுக்கு மலர்க்கொத்து வழங்கினார்.
விழாவில் 141 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. முனைவர் ரவி பழனியப்பன் ஆண்டு மலரை வெளியிட அதனைத் திருமதி. சுந்தரி குமாரும், மருத்துவர் கலை பார்த்திபனும் பெற்றுக்கொண்டனர். தமிழ்ப் பள்ளிகளின் முன்னோடி ஒருங்கிணைப்பாளர் திரு. சாந்த் குப்புசாமி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
மாணவ மாணவியர் பாரம்பரிய ஆடல் பாடல்களான கரகம், வில்லுப் பாட்டு, சுதந்திர போராட்ட தியாகிகள் வேடத்தில் தோன்றிப் பேசுதல், தமிழ்ப் பட்டிமன்றம் எனப் பல்சுவை விருந்தை வழங்கிப் பொலிவுறச் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவர் கலை பார்த்திபன் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது.
செய்திக் குறிப்பிலிருந்து |