மே 22, 2010 அன்று வடகரோலைனா மாகாணம், கெரி நகரில் இருக்கும் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழாவும், நிகழ்வு ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றன. பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் இரவி சண்முகம் வரவேற்றுப் பேசினார். அடுத்துத் தலைமையுரை ஆற்றினார் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன். சிறப்பு விருந்தினராக, பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர். வாசு அரங்கநாதன் வருகை தந்திருந்தார். அவரை திரு. செல்வன் பச்சைமுத்து அறிமுகப்படுத்திப் பேசினார். சிறப்புரை ஆற்றிய முனைவர் அரங்கநாதன் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் ஒருமுகமான பாடத்திட்டத்தைக் கொண்டு வரவேண்டியதன் தேவையை குறிப்பிட்டுப் பேசினார். “அமெரிக்கத் தமிழாசிரியர்கள், தமது மாணவர்களுக்கு தமிழ் இரண்டாம் மொழி, எதையும் ஆங்கிலத்தில் சிந்திக்கும் மாணவர்களுக்கு ஏற்றபடியாகப் பாடத்திட்டங்களை வகுத்துப் படிப்படியாக மொழியறிவை ஊட்டவேண்டும்” என்பது போல அவர் கூறிய பல கருத்துகள் சிந்தனையைக் கிளர்த்தது. பெரும்பாலான பெற்றோர்கள், தம் குழந்தைகள் எடுத்த எடுப்பிலேயே இலக்கியம் கற்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வது, மாணவர்களுக்கு சிக்கலையே ஏற்படுத்தும். மாறாக, வாசிப்புப் பயிற்சி மற்றும் தமிழில் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போன்றவற்றை ஊக்குவிக்கலாம் எனப் பல உதாரணங்களுடன் அவர் எடுத்துரைக்க, அரங்கத்தினர் கரவொலி எழுப்பி ஆமோதித்தனர்.
வட கரோலைனாத் தமிழ்ப் பள்ளியில், தமிழ் கற்ற மாணவி ஒருவர் தனது பல்கலைக்கழகப் படிப்பின் போது எவ்வாறு பலனடைந்தார் என்பதை விரித்துரைத்தார். பல்கலைக் கழகங்களில் இருக்கும் இரண்டாம் மொழிக்கான பாடத்திற்குத் தேவைப்படும் மதிப்பீடு(credit)களை, தமிழ்ப் பள்ளிகளில் பயில்வதைக் காண்பித்து ஈடுகட்ட முடியும், அவ்வாறு செய்ததால் மூவாயிரம் டாலர் பொருட்செலவையும், கால விரயத்தையும் தவிர்க்க முடியும் என்று விளக்கிச் சொன்னார். இதற்கான விழிப்புணர்வை தமிழ்ச் சங்கங்கள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என வேண்டிக் கொண்டார் முனைவர் வாசு அரங்கநாதன். பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த, பிரத்தியேக அழைப்பாளரான வலைப்பதிவர் பழமைபேசி, சார்லட் நகரில் துவங்க இருக்கும் தமிழ்ப் பள்ளிக்கு இந்நிகழ்ச்சி பெருமளவில் உதவிகரமாய் இருக்குமெனத் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். வகுப்புக்குத் தவறாமல் வருகை புரிந்த மாணவர்கள் சூர்யா சண்முகம் மற்றும் சிந்து சண்முகம் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர். எல்லாத் தேர்வுகளிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜோடேனிகா இனிகோவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. விழா மலரைத் தொகுத்து வழங்கிய எழில்வேந்தன் தருமராசன் அவர்கள் செந்தமிழில் வெகு அழகாகப் பேசி மலரை வெளியிட, தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் முதல் மலரைச் சிறப்பு விருந்தினருக்கு அளித்தார். திரு. வேதையன் அவர்கள் நன்றி நவில, நிகழ்ச்சி நிறைவெய்தியது. பழமைபேசி |