டொரண்டோவில் தியாகராஜ ஆராதனை
2010 ஏப்ரல் 16, 17, 18 நாட்களில் டொரண்டோ பாரதி கலா மன்றம் (கனடா) தியாகராஜ ஆராதனையை விமரிசையாக நடத்தியது.

முதல் நாளன்று பத்மபூஷண் டி.என். சேஷகோபாலன் அவர்களின் கச்சேரி நடைபெற்றது. 'வந்தனமு' என்று தொடங்கி சஹானாவிலேயே கச்சேரி களைகட்டிவிட்டது. பந்துவராளி 'அபராமபக்தி'யில் ராமரை மனக்கண்முன் கொண்டு வந்தார். தோடியை எப்படிப் பாடினாலும் ரசிக்க முடியும். சேஷகோபாலன் பாடினால் கேட்க வேண்டுமா! தோடியைப் பிழிந்து வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்தது போல விஸ்தாரமாக ராக ஆலாபனை இருந்தது. ஸ்வரம் பாடும்போது ரேவதியும் காபியும் அப்படியே உருக வைத்தன. வி.வி. ரவி (வயலின்), டொரண்டோவின் பேரா. சங்கரன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசித்தனர். நாலரை மணி நேரம் மறக்க முடியாத ஒரு மேதையின் கச்சேரியைக் கேட்ட பெருமகிழ்ச்சி.

மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் சிருங்கேரி வித்யாபீட மண்டபம் நிரம்பிவிட்டது. ஆராதனை ஆயிற்றே! மேடையில் 80க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர். சேஷகோபாலன், ராம்குமார்மோகன்-கிருஷ்ணமோகன் (திருச்சூர் சகோதரர்கள்), குமரேஷ், பூஷணி கல்யாணசுந்தரம், மதுரை சுந்தர், வி.வி. ரவி, வசுமதி, பூமா கிருஷ்ணன் என பிரபல பாடகர்களாலும் மற்றவர்களாலும் மேடை நிரம்பி வழிந்தது. பஞ்சரத்ன கீர்த்தனைகள் அருமையாக திருவையாறாகவே நினைத்துப் பாடப்பட்டன. பிறகு தனிநபர் பாடல்கள். 5 வயதிலிருந்து 15 வரை உள்ள சிறார்தாம் இதில் பெரும்பான்மை. அபினயா, இரண்டு அபிஷேக்குகள், ஈஸ்வர்யா, வாராஹி, லாவண்யா என வரிசையாக வந்து அருமையாகப் பாடினார்கள்.

இரவு 7 மணிக்குத் திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி. வி.வி. ரவி வயலின், திருச்சூர் மோஹன் மிருதங்கம். டொரண்டோவின் செல்லப்பிள்ளை கார்த்திக் வெங்கட்ராமன் கஞ்சிரா வாசித்தனர்.

மறுநாள் மாலையில் உன்னிகிருஷ்ணன் அவர்களின் கச்சேரி நடைபெற்றது. எம்பார் கண்ணன் வயலின் வாசிக்க, அர்ஜுன் குமார் மிருதங்கம், கார்த்திக் ராஜலிங்கம் கஞ்சிரா என்று தேன்மழை. சாவேரியில் ஸ்ரீராஜகோபாலம் மிக உருக்கமாக, சரணத்தில் நீண்ட ஸ்வரத்துடன் வந்தது. கெளரிமனோஹரியில் ராகம் தானம் பல்லவி. சமீபத்தில் கேட்காத ஒன்று. 'வில்லினை ஒத்த புருவம்', 'சந்திரஒளியில் அவளைக் கண்டேன்' பரவசப்படுத்தின.

விழாவை நடத்திய டொரண்டோ பாரதி கலா மன்ற நிர்வாகிகள் தியாகராஜன், வெங்கட்ராமன், கிருஷ்ணன் மற்றும் குழுவினரின் அசுர உழைப்பை மூன்று நாட்களிலும் உணர முடிந்தது.

அலமேலு மணி,
டொரண்டோ

© TamilOnline.com