சிகாகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 23, 2010 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைத் தனது 41ம் ஆண்டு துவக்க விழாவுடன் இணைத்துக் கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியை கலை விஜய், ராதிகா ராமநாதன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். கௌதம் பாலு, நீலன் பாலு இருவரது பொங்கல் பற்றிய விளக்க உரை மிகச் சிறப்பாக இருந்தது. விழாவின் முதற்பகுதியில் வண்ணமயமான பலவித நிகழ்ச்சிகள் நடந்தேறின. இசைக்கேற்ற நடனமும், ஆடை, அலங்காரமும் கண்ணைக் கவர்ந்தன.

தேவகி ஜானகி ராமன் குழுவினரின் நாட்டுப்புறப் பாடல் நடனம் கண்ணுக்கு விருந்து. ரேவதி சுரேஷ்குமாரின் கிழக்கிந்திய-மேற்கிந்தியக் கலவையான யோகா நடனம் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

கிருஷ்ணா பிரபாகர், அஞ்சலி பிரபாகர் என்ற ஆறு வயதுச் சிறுவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா அரங்கேறிய அதே சபையில் தங்களது முதல் நிகழ்ச்சியை அளித்தனர். இதைக் குறித்து சங்கத் தலைவர் டோனி பேசுகையில் 41 ஆண்டுகளாக தமிழ் மொழியின் அடையாளமாக இயக்கி வரும் இந்தச் சங்கம் தலைமுறைகள் தாண்டி நிலைத்து நிற்கும் என்று கூறினார்.

'ஆத்திச்சூடு' (அனு, ரேணு), 'எக்ஸ்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி' (ராதிகா ராமநாதன் குழுவினர்), 'ராதை மனதில் ரகசியம்' (மாலா வெங்கடேஷ் குழுவினர்) போன்ற பாடல்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின. திவ்யா ஆனந்தனும், வர்ஷா முத்துக்குமாரும் பாடிய சந்திரமுகி பட 'ரா... ரா...' பாடல் சிறப்பாக இருந்தது. 'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா' பாடலுக்கு ஆடிய ஸ்ரேயாவும், அனகாவும் நகைச்சுவை ததும்ப நடித்தது மிக சுவாரசியம்.

சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த ப்ளூமிங்க்டன் (இல்லினாய்ஸ்) தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஆண்கள் 'ஆடவரெல்லாம் ஆட வரலாம்' என்ற தலைப்பில் ஒரு நீண்ட நடன விருந்தை அளித்தனர். கர்ணி தமிழ்ச்சங்கச் சிறுவர்கள் வழங்கிய 'பொங்கலோ பொங்கல்' என்ற நகைச்சுவை நாடகத்துடன் முதற்பகுதி நிறைவடைந்தது.

'வாழ்க்கை பெரிதும் இனிப்பது - இருபதிலா? அறுபதிலா?' என்ற பட்டிமன்றத்துடன் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் ஆரம்பமானது. இருபது என்ற அணியில் பிரசாத் ராஜாராமன், வைதேகி, சபரி, ப்ரீதி மணிவாசகம் ஆகியோரும், அறுபது என்ற அணியில் மணிகண்டன், மயூரி, ரங்கம் சுப்ரமணியன், மினு கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். நகைச்சுவை ததும்பப் பேசிய நடுவர் சி.எஸ்.பாஸ்கரன் இறுதியில் 'அறுபதில்தான்' என்ற தீர்ப்பை வழங்கினார்.

சோமு திரு, அறவாழி, ரவிக்குமார் மூவரின் உழைப்பும், ஒருங்கிணைப்பும் பாராட்டுக்குரியது.

என். சந்திரகுமார்,
சிகாகோ

© TamilOnline.com