மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
‘வல்லமை தாராயோ' வெற்றிப்படத்தின் இயக்குநர் மதுமிதா, நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கும் படம் 'கொலகொலயா முந்திரிக்கா'. முழுக்க முழுக்க நகைச்சுவைச் சித்திரமாக உருவாகும் இந்தப் படத்துக்கு கதை, வசனத்தை கிரேசிமோகன் எழுத, திரைக்கதை எழுதி இயக்குகிறார் மதுமிதா. ‘பொய் சொல்லப் போறோம்' பட நாயகன் கார்த்திக் குமார் இதன் கதாநாயகன். ஜோடியாக, ஷிகா என்ற புதுமுகம். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், வாசு விக்ரம், கோட்டா சீனிவாசராவ், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ‌'வெண்ணிலா கபடி குழு' படத்திற்கு இசையமைத்த செல்வகணேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மதுமிதாவின் கணவர் விஜய் வெங்கட்ராமன் டெக்னிக்கல் டைரக்டர் மற்றும் எடிட்டிங் பொறுப்புகளை கவனிக்கிறார். திரிசக்தி சுந்தரராமன் படத்தைத் தயாரிக்கிறார்.

“எத்தனையோ நகைச்சுவைப் படங்கள் வந்தாலும் ‘காதலிக்க நேரமில்லை' படத்தை இதுவரை எந்த படமும் தொடமுடியவில்லை. அந்த தூரத்தை இப்படத்தின் மூலம் தொட முயற்சி செய்திருக்கிறோம். ‘பஞ்சதந்திரம்' மாதிரி ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவையாக இருக்கும்” என்கிறார் கிரேசி மோகன். “முழுக்க முழுக்க காமெடி த்ரில்லராகத்தான் இந்த ஸ்கிரிப்டை வடிவமைத்திருக்கிறோம். வல்லமை தாராயோ படத்தின் ஸ்டைல் துளியுமில்லாத ஒரு திரைக்கதையை இதில் பார்க்கலாம்” என்கிறார் மதுமிதா. இப்படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவரும் பெண்களே என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com