எங்கும் நிறைந்த பரம்பொருள் அன்னை. அகிலம் அனைத்திற்கும் அருள் பாலிப்பவள் அவளே! இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய அனைத்து சக்திகளுக்கும் ஆதியாய் விளங்கும் அன்னை ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியின் ஆராதனைக் காலம்தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாளும் சக்தி வழிபாடு சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்னையை, முதல் மூன்று நாள் சக்தியைத் தரும் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாள் செல்வத்தைத் தரும் லக்ஷ்மியாகவும் இறுதி மூன்று நாள் கல்வி, ஞானம் அருளும் சரஸ்வதியாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுதல் வழக்கம்.
பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி என யார் எழுந்தருளியுள்ள கோயிலாக அது இருந்தாலும் அங்கு நவராத்ரி மற்றும் திருவிழாக் காலங்களில் விசேஷ ஆராதனையின் போது ஒலிக்கும் நாமம் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆயிரம் நாமமே! (சஹஸ்ர நாமம்) இந்த நாமத்தை அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை ஹயக்ரீவருக்கு உபதேசம் செய்ய, பின் அவரிடமிருந்து ஸ்ரீ அகஸ்திய மாமுனி உபதேசம் பெற்றார். இந்த அன்னையை, எவ்விடம், எப்படி, எங்கு தரிசிக்கலாம் என அகஸ்தியர் ஹயக்ரீவரிடம் கேட்க, அவர், ‘தென்னிந்தியாவில் திருமீயச்சூரில் அன்னை கோவில் கொண்டுள்ளாள். அங்கு சென்று தரிசித்து இந்த சஹஸ்ரநாம பூஜையைப் பார்த்தால், சகல நற்பலன்களையும் பெறலாம்' என அருள, அகத்தியர் தன் மனைவி லோபா முத்திரையுடன் அங்கு சென்று வழிபட்டு அன்னையை வணங்கினார். அன்னை அவருக்கு நவரத்ன வடிவில் காட்சி தர, அதனால் இத்தலத்தில் 'மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே' எனத் தொடங்கும் ஸ்ரீ லலிதா நவரத்னமாலையை இயற்றி, சகல நன்மைகளையும் பெற்றார் என்பது வரலாறு. நவராத்திரி ஒன்பது நாளும் ஸ்ரீலலிதா சஹஸ்ர நாம பாராயணம் செய்து வழி பட்டால் வாழ்வில் எல்லா நலன்களும் பெறலாம் என்பது உண்மை.
##Caption## எல்லா உயிரிலும் அன்னை கொலு வீற்றிருக்கிறாள் என்ற தத்துவத்தை நினைவுபடுத்தவே கொலுப்படிகளில் தெய்வ வடிவங்கள், மானிடர், பறவைகள், மிருகங்கள் எனப் பலவகை பொம்மைகள் வைக்கப்படுகின்றன. மரப்பாச்சி பொம்மைகளை ஸ்வாமி, அம்பாளாகப் பாவித்து அலங்கரித்து மேல்படியில் வைக்க வேண்டும். பின்னர்தான் பொம்மைகளை வைப்பது வழக்கம். விநாயகர், ஸரஸ்வதி, லக்ஷ்மி, துர்கை, சிவபார்வதி, முருகன், கிருஷ்ணர், ராமர் பொம்மைகளை வைத்த பின்னர் மகான்கள், அடுத்து பறவைகள், மிருகங்கள் என வைத்து கொலுப்படிகள் அலங்கரிக்கப்படுகின்றன.
ஸ்ரீ ராமர் நவராத்திரி ஒன்பது நாளும் பூஜை செய்து வழிபட்ட பின், சீதையை மீட்க ராவணனை வதம் செய்தார் என்பதும், பகவான் கிருஷ்ணர் பிருந்தாவனத்தில் நவராத்திரி பூஜை அனுஷ்டித்து அன்னையின் அருளைப் பெற்றார் என்பதும் வரலாறு.
ஒன்பது நாளும் அம்மனை அலங்கரித்து சிரத்தையுடன் பூஜை செய்தல், நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து மஞ்சள், குங்குமம், பரிசுப்பொருட்கள் கொடுத்து தின்பண்டங்கள் வழங்குதல், அன்னையின் தோத்திரங்களைப் பாடுதல், கூட்டுப் பிரார்த்தனை செய்தல் யாவும் குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். நவராத்திரி ஒன்பது நாளும் லலிதா ஸகஸ்ரநாம வழிபாடு, தீக்ஷிதரின் கமலாம்பாள் நவாவர்ண கிருதி, அபிராமி அம்மை பதிகம், அபிராமி அந்தாதி போன்றவற்றைப் பாடி வழிபாடு செய்தல், தேவி பாகவதம் சுந்தர காண்ட பாராயணம் செய்தல் என யாவும் சிறந்த நற்பலன்களையும், மேன்மைகளையும் அளிக்கும்.
பாண்டவர்கள் கௌரவர்களுடன் போரிடுவதற்காக ஒன்பது நாட்கள் பூஜித்து தசமியன்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டதால் அர்ஜூனனாகிய விஜயன் பயபக்தியுடன் பூஜை செய்ததால் (விஜயம் தரும் தசமி) விஜயதசமி எனப் பெயர் பெற்றது என்று கூறப்படுகின்றது.
அன்றைய தினம் வெற்றி தரும் நாள் என்பதால் எந்தக் காரியம் ஆரம்பித்தாலும் வெற்றி தரும் என மாணவர்கள், ஆசிரியர்களை வணங்கி மரியாதை செய்து, புதுப் பாடம் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். வணிகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் புதுத் தொழில், கணக்குகள் தொடங்குகின்றனர்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாரத கலாசாரத்தின் பாரம்பரியம் குறையாமல் பண்டிகைகள், விழாக்களைக் கொண்டாடி மனம் கனிந்து ஆண்டவனை வழிபட்டு, தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்து வருவது சிறப்பு.
சீதா துரைராஜ் |