உத்தமர் காந்தி பிறந்தது இந்தப் புண்ணிய பூமியாம் பாரதநாடு. எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டென வாழ்ந்தவர் மூதறிஞர் இராஜாஜி. இரும்பு மனிதரென அந்நிய நாட்டார் பாராட்டிப் பேசிய வல்லபாய் பட்டேல், குழந்தைகள் மழலைகள் கொஞ்சியே மகிழ்ந்தவர் பாரதப் பிரமர் 'சாச்சா' நேரு, அத்வைத கொள்கையெனும் புதுமையினை அகிலமெங்கும் பரப்பிய ஆதிசங்கரர், போதிமர நிழலில் ஞானம் பெற் அகிம்சைக்கு விளக்கம் சொன்ன புத்தர், தெய்வமெனப் பெண்ணினத்தை வழிபட வேண்டுமென்று போதித்த இராமகிருஷ்ண பரமஹம்சர், உலக அரங்கில் இந்துமத உயர்வதனை ஆங்கிலத்தில் முழங்கிட்ட விவேகானந்தர்.
சமூக சேவைக்கே தெரஸா அன்னையும் தேர்ந்தெடுத்த நாடு இப்பாரத நாடே. மகளிர் குலத் திலகமெனப் பார் வியந்து போற்றிய முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி. இசைமழையில் அனைத்துலகும் மெய்சிலிர்க்க வைக்கின்ற பாரத ரத்தினம் எம்.எஸ். சுப்புலட்சுமி, நடனம் என் மூச்சென்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற அகில உலகப் புகழ் பத்மா சுப்பிரமணியம், தத்துவமேதையென்றுலகின் வரலாற்றில் இடம்பெற்ற டாக்டர். இராதாகிருஷ்ணன், பயிர்வாடக் கண்டிட்ட போதெல்லாம் தாமும் வாடிய அருளாளர் இராமலிங்க வள்ளலார், பெண்ணடிமை தீருமட்டும் இல்லையிங்கு விடுதலை என்றே முழங்கிய மகாகவி பாரதியார், வெள்ளையனும் வியப்புறவே ஆங்கிலத்தில் வாதிட்ட வழக்கறிஞர் தீரர் சத்தியமூர்த்தி.
புண்ணிய நாடாம் பாரதநாட்டுப் பெருமைக்கு இங்கு சான்றோர் பட்டியல் இன்னும், இன்னும் வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். அளவேதுமிங்கில்லை. பழம்பெரும் நாடாம் பாரதநாட்டிற் கிணையொன்றில்லை. இவ்வையகத்தே உண்மை. சாதனை படைத்த இச்சான்றோர் தமக்கெம் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!
டாக்டர் அலர்மேலு ரிஷி |