காய்கறிப் பயிர்கள்
அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே.
அகத்திக்கீரைக்கு மஞ்சள் போட்டாவதென்ன?
அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச்சொன்னால் வெங்காயம், கறிவேப்பிலை என்பாள்.
அரசன் கல்லின் மேல் கத்தரி காய்க்கும் என்றால் கொத்து ஆயிரம், குலை ஆயிரம் என்பார்கள்.
அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்கும்.
அவரை விதைக்கத் துவைரை முளைக்குமா?
அவன் உனக்குக் கிள்ளுக்கீரையா?
அன்றைக்குத் தின்கிற பலாக்காயை விட, இன்றைக்குத் தின்கிற களாக்காய் பெரிது.
ஆகட்டும் போகட்டும் அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும் தம்பட்டங்காய் காய்க்கட்டும், அவனுக்குக் கலியாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடுகிறேனா பார்.
ஆடாது எல்லாம் ஆட அவரைக் காயும் அறுத்தாச்சு.
ஆடுவதும் ஆடி அவரைக் காயும் பறிச்சாச்சு.
ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக்குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ.
ஆண்டிக்குப் பிச்சையா, அவன் குடுவைக்குப் பிச்சையா?
ஆழும் பாழும் அரைக்கீரைப் பாத்தியும்.
ஆளான ஆள் பாடுகிற பாட்டில் அழுகற் பூசணிக்காய் எம்மட்டு?
ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, ஆண்பிள்ளை கொழுத்தால் கீரைத்தண்டு.
*****
உழவியல்
அகல உழுகிறதை விட ஆழ உழுகிறது மேல். அடர விதைத்து ஆழ உழு. அடர்த்தியை அப்போதே பார், புழக்கத்தைப் பின்னாலே பார். அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்ற வேண்டும். அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி. அடைத்தவன் காட்டைப் பார், மேய்ந்தவன் மாட்டைப் பார். அடை மழையில் நாற்று நட்டால் ஆற்றோடு போகும். அதிகாலையில் ஏழாதவன் அதிர அடித்தால் உதிர விளையும் அதிர்ஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். அத்தத்தில் நாற்றுவிடு. அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா? அம்பாத்தூர் வேளாண்மை யானை கட்டத் தாழ்வான மட்டும் போர், ஆறு கொண்டது பாதி, தூறு கொண்டது பாதி. அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது, பாவி பாக்கியம் பதராய் விளைந்தது. அம்மை குத்தினாலும் பொம்மை குத்தினாலும் வேண்டியது அரிசி. அரண்மனைக்கு ஆயிரஞ் செல்லும், குடியானவன் என்ன செய்வான்? அரண்மனை வாசல் காத்தவனும் பரிமடை காத்தவனும் பழுது போனதில்லை. அரிசி என்று அள்ளிப் பார்ப்பாருமில்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாருமில்லை. அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? இக்கரையில் பாகலைப் போட்டு, அக்கரையில் கொழு கொம்பு வைக்கிறான். இஞ்சி தின்ற குரங்கு போலப் பஞ்சரிக்கிறான். இஞ்சி தின்ற குரங்கே இருந்த இடத்திலே உறங்கே. இஞ்சி என்றால் தெரியாதா, எலுமிச்சம்பழம் போலத் தித்திப்பாயிருக்குமே. |