மீண்டும் வந்த ந(ம்பிக்)கைக் கடை
கஷ்ட காலத்தில் நகையை அடகு வைத்துப் பிறகு மீட்டுக் கொள்வது சகஜமான விஷயம். ஆனால், கஷ்டத்தால் நொடித்துப்போன நகைக் கடையே மீட்(ண்)டு வந்துள்ள அதிசயம், சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்தது.

பாலு ஜுவல்லர்ஸ் நிறுவனர் பாலசுப்பிரமணியத்துக்கு 'புன்னகை மன்னர் பாலு' என்றச் செல்லப்பெயர் உண்டு. வாடிக்கையாளர்கள் பலரை வசீகரித்த இனிய முகம் அவருடையது. அவரது திடீர் மறைவுக்குப் பிறகு, நகைக் கடையை அவரது மைந்தர் பாலு ஐயப்பன் நிர்வகிக்கத் தொடங்கியபோதுதான் வாடிக்கையாளர்களின் புன்னகையை மறையச் செய்த மற்றொரு துயரச் சம்பவம் நடந்தது.

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு சென்னையில் திடீரென மூடப்பட்ட நகைக் கடைகளின் வரிசையில் எதிர்பாராத விதமாக பாலு ஜுவல்லர்ஸ¤ம் சேர்ந்தது. எனினும் 'வானுயர்ந்த நம்பிக்கை' என்ற பாலு ஜுவல்லர்ஸின் முந்தைய விளம்பர வாசகம் பொய்யாகவில்லை.

மற்றெந்த மூடப்பட்ட நகைக்கடை உரிமையாளர்களுக்கும் இல்லாத துணிவுடனும் நம்பிக்கையுடனும் சமீபத்தில் (29.11.2000-ல்) பாலு ஜுவல்லர்ஸை மீண்டும் திறந்துள்ளார் பாலு ஐயப்பன். இதற்கு அடிப்படைக் காரணம், வாடிக்கையாளர்களும் நண்பர்களும் தங்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள அசையாத நம்பிக்கைதான் என்று கூறும் பாலு ஐயப்பனுடன் உரையாடியபோது....

"நன்றாக நடந்துவந்த எங்கள் நகைக் கடை நொடித்துப் போனதற்கு, `பாம்பன் ஆயில்' உற்பத்தி என்ற புதிய நடவடிக்கைதான் காரணம். பாம்பன் ஆயிலும் நன்கு பிரபலமாகத்தான் இருந்தது. ஆனால், கடன் வாங்கி அத் தொழிலில் முதலீடு செய்ததால் தினசரி வட்டியாக மட்டுமே இரண்டரை லட்சம் ரூபாய் கட்ட வேண்டியிருந்தது.

"அதைத் தாக்குப்பிடிக்க இயலாமல், இறுதியில் நகைக் கடையும் நொடித்துப்போக நேர்ந்தது. எனினும், எங்களிடம் நகைச் சீட்டு கட்டியவர்களும் டெபாசிட் செய்தவர்களும் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. கெட்ட நோக்கத்தில் அன்றி, போதாத நேரத்தால்தான் எங்கள் கடை திவாலாக நேர்ந்தது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

"டெபாசிட்தாரர்கள் சங்கம் அமைத்து அவர்கள் என்னை அணுகியபோது, அவர்களது பணத்தைத் திருப்பித்தர என் முன்னிருந்த இரண்டு திட்டங்களைக் கூறினேன். ஒன்று, எங்களது சொத்துகளை விற்று பணத்தைத் திருப்பித் தருவது. மற்றொன்று, கடையை மீண்டும் திறந்து வியாபாரம் செய்து பணத்தைத் திருப்பி அளிப்பது.

"சொத்துகளை விற்றுப் பணம் தந்தால், விகிதாசார அடிப்படையில் குறைந்த பணம்தான் திரும்பக் கிடைக்கும். கடையை மீண்டும் திறந்து பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டுமானால், சில காலம் பொறுத்திருக்க வேண்டும். எங்களது வாடிக்கையாளர்கள், நம்பிக்கையுடன் சில காலம் பொறுத்திருப்பதாகக் கூறி, கடையை மீண்டும் திறக்க உற்சாகமளித்தார்கள்.

"அத்துடன் மலேசியாவில் உள்ள அகேட் ·பைனான்ஸ் (Agate Finance) என்ற எனது நண்பரின் நிறுவனம், நகைக் கடையை மீண்டும் திறப்பதற்கு வட்டியில்லாமல் சுமார் 7 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்தார்கள். நடக்கும் வியாபாரத்தில், தினந்தோறும் குறிப்பிட்ட தொகையை அசலுக்காகத் திருப்பித் தருவதாக உடன்பாடு. கடையின் முன்னேற்றத்துக்காக மேலும் முதலீடு செய்யவும் அவர்கள் தயாராகவுள்ளனர்.

"ஏற்கெனவே சீட்டு கட்டிய வாடிக்கையாளர்களின் பணத்தை, வரும் மார்ச் மாதம் முதல் திருப்பிச் செலுத்தவுள்ளோம். ·பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்களின் பணத்தை, வரும் ஜூன் மாதம் முதல் திருப்பியளிக்கவுள்ளோம்'' என்றார் பாலு ஐயப்பன்.

உரையாடலின் இடையிடையே பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கும், விசாரிப்புகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார். புதிய பொலிவுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இக் கடையில் முன்பு போலவே உற்சாகமான வாடிக்கையாளர் கூட்டம். தொடக்க விழாவையொட்டி அறிவிக்கப்பட்ட 'செய்கூலி இல்லை' என்ற சலுகைத் திட்டம் மேலும் சில தினங்கள் நீடிப்பதாக விளம்பர பேனர் தெரிவித்தது.

புதிதாக நகை வாங்கிய ஒரு வயதான பெண்மணி, விலையைக் குறைக்குமாறு கேட்டார். உடனே, பாலு ஐயப்பன் குறிப்பிட்ட தொகையைக் குறைத்தார். அது போதாது, மேலும் சிறிது குறைக்க வேண்டும் என்று அப் பெண்மணி மீண்டும் கேட்டார்.

'ரொம்ப விலையைக் குறைச்சா, பணத்தை எப்படித் திருப்பித் தருவது?' தந்தையைப் போன்றே சிரித்த முகத்துடன் அவரிடம் பதில் கேள்வி எழுப்பினார் பாலு ஐயப்பன்.

நாலைந்து பேர், சீட்டு, டெபாசிட் பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்க வந்தனர். எந்த மாதம் முதல் திருப்பித் தருகிறோம் என்பதை ஐயப்பன் கூறியதை அடுத்து, அவர்களில் யாருமே முணுமுணுத்தபடி செல்லவில்லை. மாறாக அவர்களில் சிலர், மீண்டும் கடை திறந்ததற்கு வாழ்த்துக் கூறிவிட்டுச் சென்றார்கள்.

பாலு ஜுவல்லர்ஸை முன்னுதாரணமாகக் கொண்டு, மூடப்பட்ட இதர நகைக் கடைகளின் உரிமையாளர்களும் நம்பிக்கையுடன் களமிறங்குவார்களா? நாணயத்துடன் வாடிக்கையாளர்களின் நாணயத்தைத் திருப்பி அளிக்க முன்வருவார்களா?

பத்மன்

© TamilOnline.com