உமையாள்புரம் K.சிவராமன்
கர்நாடக சங்கீதம் என்பதை அறிந்திருப் பவர்கள் எவருக்கும் உமையாள்புரம் K.சிவராமனைத் தெரியாமலிருக்க முடியாது. நாட்டின் மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்ற மிருதங்க வித்துவான். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி போன்ற உயரிய விருதுகளைப் பெற்ற இவர் தமிழ்நாட்டின் ஆஸ்தான வித்துவானாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளார். அறுபத்தாறு வயதிலும் இளைஞராகவே வலம் வந்து தன்னுடைய கலை அனுபவத்தை புதிய தலைமுறையினருக்கும் கற்றுத் தரும் சீரிய பணிகளைச் செய்து வரும் உமையாள்புரம் K.சிவராமனுடன்...
உங்களுடைய கலைப் பயணம் எப்போதிருந்து தொடங்கியது?
என்னுடைய கலைப் பயணம் என்று சொன்னால், அது மூன்றாவது வயதில் ஆரம் பித்தது. இப்போது வரை என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மூன்றா வது வயதில் முதலில் கஞ்சிரா வாசிக்க ஆரம்பித்தேன். அப்புறம் ஐந்தாவது வயதில் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தேன். அப்புறம் பத்தாவது வயதில் என்னுடைய அரங்கேற்றம் நடந்தது. என்னுடைய கலைப் பயணத்தில் இப்போது எனக்கு ஐம்பத்தாறாவது வருஷம் முடிவடைந்திருக்கிறது.
என்னுடைய கலைப் பயணத்துக்கான கப்பல் தான் கர்நாடக சங்கீதம். நல்ல காற்றடித் தால்தான் கப்பல் நகரும் அது போல, காற்று என்று சொன்னால், அப்போது ஏற்பட்ட சூழ்நிலைகள், நான் வாசித்த பெரிய வித்து வான்கள், அதற்கேற்பட்ட பெரிய சந்தர்ப் பங்கள், எனக்குக் கிடைத்த பாராட்டுக்கள் இவைகளைச் சொல்லலாம்.
உமையாள்புரத்துக்கு என்ன விஷேசம் என்று சொன்னால், கர்நாடக சங்கீத உலகத்தில் உமையாள்புரத்துக்குத் தனியான சிறப்பான ஒரு இடம் உண்டு. என்ன காரணம் என்று கேட்டால், தியாகராஜ சுவாமிகளுடைய ரெம்ப முக்கிய மான சிஷ்யர்கள் அங்கு வசித்தனர். உமையாள் புரம் கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர் இருவரும் தியாகராஜ சுவாமிகளுடைய சிஷ்யர்கள். அவர்களிருவரும் தியாகராஜ சுவாமிகளுடைய கிருதிகளை நிறையச் சிஷ்யர்களுக்கு வாரி வழங்கியுள்ளனர். அந்தச் சிஷ்ய வர்க்கத்தில் வந்த மகா மேதைக ளெல்லாம் அவர்களுடைய சிஷ்யர்களுக்குச் சொல்லிக் கொடுத்து இது வாழையடி வாழையாய் வளர்ந்து வந்திருக்கிறது.
உமையாள்புரம் என்ற அந்த மண்ணுக்கே சங்கீத ஞானம் உண்டு என்று சொல்வார்கள். எனவே எனக்கு அந்த சங்கீத ஞானம் இயற்கையாகவே அமைந்து விட்டது. என்னுடைய தகப்பனார் டாக்டர். காசி விசுவநாத அய்யர் என்னுடைய ஆர்வத்தைப் புரிந்து கொண்டார். என்னுடைய பாட்டி மூன்று வயதில் எனக்கு ஒரு கஞ்சிரா வாங்கித் தந்தார். அப்புறம் எனக்கு ஐந்து வயதில் மிருதங்க வாத்தியார் ஏற்பாடு செய்தார்கள். என்னுடைய முதல் குரு ஆறுபாதி நடேசய்யர். அவரிடம் ஏழு வருடம் மிருதங்கம் கற்றுக் கொண்டேன். அப்புறம் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் என்கிற மகாமேதையிடம் அவரிடம் போய் மிருதங்கம் சொல்லிக் கொண்டேன். அப்புறம் பாலக்காட்டு மணி அய்யரிடம் சொல்லிக் கொண்டேன்.
கும்பகோணம் ரங்கு ஐயரிடம் சொல்லிக் கொண்டேன். மொத்தத்தில் என்னுடைய குருகுல வாசம் என்று பார்த்தால் பதினைந்து வருடம். இதோடு சேர்த்து மிருதங்கம் என்று மட்டுமில்லாமல் என்னுடைய அடிப்படைப் பள்ளிக் கல்வியும் தொடர்ந்து பல ஊர்களில் ஜாகை போட்டேன். மெட்ராஸில ஜாகை போட்டு, தஞ்சாவூரில் ஜாகை போட்டு அப்புறம் மறுபடி மெட்ராஸ் வந்து... இப்படி என்னுடைய கலைப் பயணம் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது.
பத்து வயதில் என்னுடைய அரங்கேற்றம் நடந்தது. பத்து வயதிலிருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெரிய பெரிய வித்துவான்களுக்குத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அந்த மகா வித்துவான்களுக்காக நான் வாசித்த அந்த நாட்கள்தான் என்னுடைய வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். கர்நாடக சங்கீதத் துறையில் இப்போது எனக்கென்று ஒரு இடம் இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் அந்த வித்துவான்கள்களுக்கு நான் வாசித்ததுதான். அந்த மகா வித்வான்கள் வித்தை யாரிடம் இருந்தாலும் அவர்களைப் பாராட்டித் தட்டிக் கொடுத்து ஊக்குவிப் பார்கள். என்னிடம் வித்தை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட அந்த வித்வான்கள் எனக்கு நிறையக் கச்சேரிகள் தந்து என்னை வளர்த்துவிட்டார்கள். அவர்கள்தான் எனக்குக் கிடைத்த எல்லா விருதுகளுக்கும் காரணம். எனவேதான் மியூசிக் அகாதெமியில் இந்த வருடம் எனக்கு சங்கீத கலாநிதி விருது தருகிறார்கள்.
உங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத கச்சேரிகள் எவையெவை?
நிறைய அமைந்திருக்கிறது. இந்த நாட்டிலேயே நிகழ்ந்திருக்கிறது. அதே போல் வெளிநாடுகளிலும் நிகழ்ந்திருக்கிறது. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு வாசித்த கச்சேரிகள், பண்டிட் ரவிசங்கரோடு வாசித்த கச்சேரிகள் என நிறையச் சொல்லலாம். சிங்கேரிப் பெரியவர் என்னுடைய மிருதங்கத்தைப் பூஜையில் தனி ஆவர்த்தனமாக வாசிக்கச் சொன்னார். நானும் வாசித்தேன். நான் வாசித்த மற்ற தனி ஆவர்த்தனங்களுக்கு நிறைய இடங்களில் கைதட்டிப் பாராட்டுக்கள் தெரிவித்திருக்கின்றனர். சர்வதேச இசை மகாநாடுகளில் கலந்து கொண்டு நான் வாசித்த போது பலர் பாராட்டியுள்ளனர். இதையெல்லாம் சொல்லலாம். மகாமேதை செம்பை வைத்தியநாத பாகவதர் சின்ன வயசில் எனக்குப் பெரிய சந்தர்ப்பங்களெல்லாம் அளித்திருக் கிறார். ஒரே நிகழ்ச்சியில் எனக்கு ஐந்து தனி ஆவர்த்தனங்களெல்லாம் கொடுத்திருக்கிறார். 'கவலைப்படாதீங்க சிவராமன். மக்கள் ரசிக்கிறார்கள். நான் உங்களுக்கு நிறையத் தனி ஆவர்த்தனங்கள் தருகிறேன்' என்று சொல்லி எனக்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். இதற்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?
அதேமாதிரி அரியங்குடி ராமானுஜ ஐயங் காருக்கு வாசிக்கும் போது, அந்தக் கச்சேரிக்கு என்னுடைய குரு பாலக்காட்டு மணி ஐயர் வருவதாக இருந்தார். என்னுடைய குருவைப் பார்த்துவிட்டு ராமானுஜ ஐயங்கார் உடனே, ' இதில் தனி ஆவர்த்தனம் வாசி. உன்னுடைய குரு நல்லா கேட்பார். சந்தோசப்படுவார்' என்று சொல்லி எனக்குத் தனி ஆவர்த்தனம் வாசிக்க வாய்ப்புக் கொடுத்தார். மனசு விட்டுக் கொடுத்து இப்படியெல்லாம் என்னை வளர்த்ததை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அதே மாதிரி பெல்ஜியத்திலுள்ள ஜாஸ் குரூப் ஒன்றில் இப்ப போய் மிலேனியம் கான்செப்டெல்லாம் வாசித்தேன். அங்க பிரமாதமான வரவேற்பு. அவங்களுக்கு நம்ம சங்கீதத்தில் நல்ல இன்ட்ரஸ்ட். என்னை அவர்கள் மானசீக குருவாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
நியாபகம் வைத்துக் கொள்கிற மாதிரியான கச்சேரிகளைத்தான் நாம் பண்ண வேண்டும். கத்தியைத் தீட்டிக் கொண்டிருப்பது மாதிரி புத்தியைத் தீட்டிப் புதிது புதிதாக எதையாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கச்சேரிகள் நமக்கும் நியாபகம் இருக்கும். கேட்பவர்களுடைய நியாபகத்திலும் இருக்கும். இந்தத் துறையில் நல்லா பேர் பண்ணனும். பேர் வந்த பிறகு அதை மெயின்டேன் பண்ணனும். மெயின்ட்டேன் பண்ணிக் கொண்டே புதிதாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவரும் நம்மை ரசித்துப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். தலைமுறைகள் மாறிக் கொண்டேயிருக்கிறது. ரசனை முறைகளும் மாறிக் கொண்டே யிருக்கிறது. அதற்குத் தகுந்த மாதிரி நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மிருதங்க வாசிப்பாளராக மட்டுமல்லாமல், இந்தத் துறையில் புதிதாக ஏதேனும் ஆய்வுகள் செய்திருக்கிறீர்களா?
ஆமாம் நிறையப் பண்ணியிருக்கிறேன். முந்தியெல்லாம் மிருதங்கத்தைச் சாதாரண மான துணி உறையில் வைத்துக் கட்டிக் கொண்டு போவார்கள். நான்தான் ரெக்ஸினில் வாட்டர் புரூ·ப் உறைகளைப் பண்ணிக் கொடுத்தேன். அதைப் பண்ணிக் கொடுத்து 29 வருடங்கள் ஆகிவிட்டது. பைபர் கிளாஸில் மிருதங்கம் பண்ணினேன். சாதாரணமாக மிருதங்கம் பலா மரத்தில்தான் மிருதங்கம் பண்ணுவார்கள். சந்தன மரம் போன்ற பலவகை மரங்களில் பண்ண முடியும் என்றாலும், எல்லா காலங்களிலும் எளிதாகக் கிடைக்கக் கூடிய பலா மரத்தில்தான் பண்ணுவார்கள். இப்போ தெல்லாம் நல்ல பலா மரங்கள் கிடைப்பதில்லை என்பதால் நான் பைபர் கிளாசில் அறிமுகப் படுத்தினேன். அப்புறம் மிருதங்கத்தில் மூட்டு அடிக்கும் போது பிழைகள் சுருதி சம்பந்தமாக ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்காக மெக்க ¡னிக்கல் ஜிக் ஒன்றைப் பண்ணினேன். மிருதங்கத்துக்குப் பைபர்கிளாஸ் பாக்ஸ் பண்ணினேன். அப்புறம் மிருதங்கம் வாசிப்பதில் பல உத்திகளைப் புகுத்தினேன். பாட்டுக்கு வாசிக்கிறது, ஜுகல் பந்தி வாசிக்கிறது, ஜாஸ¤க்கு வாசிக்கிறது, ராப், பாப்புக்கு வாசிக்கிறது என்று புதிதுபுதிதாக உத்திகளை அறிமுகப்படுத்தினேன்.
திரைப்படத் துறையில் நிகழ்ந்த உங்களுடைய பங்களிப்பு பற்றி...?
திரைப்படத் துறையில் 'மிருதங்கச் சக்கரவர்த்தி' என்ற படத்தில் அறிமுகமானேன். கலைஞானம் என்பவர் அந்தப் படத்தை எடுத்தார். என் நண்பர் எம்.எஸ்.விசுவநாதன் அந்தப் படத்துக்கு இசையமைத்தார். சங்கர் அந்தப் படத்தை இயக்கினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தப் படத்தில் மிருதங்கக் கலைஞராக நடித்தார். அந்தப் படத்திற்கு நான்தான் வாசிக்க வேண்டும் என்று எல்லோரோம் ஏகமனதாகத் தீர்மானித்து என்னிடம் கேட்டார்கள். அப்போது நான் அவர்களிடம் எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். உரிய மரியாதைகள் மட்டும் கொடுத்தால் போதும். அதே மாதிரி சிவாஜிகணேசன் நடிக்கிற வீட்டில் தியாகராஜ சுவாமிகள் படமும் என்னுடைய குருநாதர் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் படமும் மாட்டினால் போதும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் அதை எனக்காகச் செய்து தந்து என்னை உரிய மரியாதையுடன் நடத்தினார்கள்.
இரண்டு மூன்று நாட்களுக்குள் எனக்குரிய ரெக்கார்டிங் வேலையெல்லாம் முடிந்து விட்டது. ஆனாலும் படம் முடிகிற வரை நீங்கள் இருக்க வேண்டுமென்று சிவாஜி என்னிடம் கேட்டுக் கொண்டார். அந்தப் படத்தில் பிரபு ஒரு காதல் சீனில் ரொமான்டிக்காக மிருதங்கம் வாசிக்கும் காட்சியில் என்னை வாசிக்கச் சொன்னார்கள். நானும் ரொமொண்டிக்காக அந்தக் காட்சிக்காக மிருதங்கம் வாசித்தேன். அந்தப் படத்தில் பணியாற்றுகிற போது சிவாஜி என்னை 'வாத்தியார்' என்றுதான் அழைப்பார். ஒரு காட்சி முடிந்ததும் என்னிடம் வந்து 'என்ன வாத்தியாரே சரியாக வாசிக்கிற மாதிரி பாவனைகள் காட்டினேனா?' என்று கேட்பார். அந்தளவிற்கு அந்த உன்னதக் கலைஞன் தன்னுடைய தொழில் மீது அபரிமிதமான பக்தியைக் கொண்டிருந்தார். இதனால்தான் அவர் நடிகர் திலகமாக இருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அப்புறம் 'சிந்து பைரவி' படத்தில் வாசிக்க அழைத்தார்கள். அப்போது நான் அமெரிக்கா விற்குப் போயிருந்ததால் என்னால் வாசிக்க முடியவில்லை. இருந்திருந்தால் வாசித்திருப் பேன். அதேமாதிரி சினிமா துறையில் எம்.ஜி.ஆர் என்மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்தார். முதலமைச்சராக வருவதற்கு முன்பிருந்தே பிரியம் வைத்திருந்தார். நான் எந்தக் கச்சேரிக்கு அவரைக் கூப்பிட்டாலும் வராமல் இருக்க மாட்டார். கச்சேரிக்கு வந்து கடைசிவரை கேட்டுவிட்டுப் பாராட்டி விட்டுத்தான் செல்வார். அவர் முதலமைச்சராக இருந்த போதுதான் ஏழு வருடம் தமிழ்நாட்டின் ஆஸ்தான வித்துவானாக நான் இருந்தேன். அதேமாதிரி இளையராஜா வீட்டில் நவராத்திரி காலங்களில் வாசிப்பேன். பொறுமையாக அமர்ந்திருந்து அவரும் அவர் பிள்ளைகளும் ரசிப்பார்கள்.
திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சிச் சேனல்கள் மக்களை ஆக்கிரமித்திருப்பதாகவும் அதனால் சபாக்களுக்குக் கச்சேரிகள் கேட்க வருகிற கூட்டம் குறைந்திருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறதே?
அப்படியெல்லாம் கூட்டம் கம்மியாகவில்லை. இன்றைக்கு இசைக் கல்லூரியில் இடமில்லை. டிசம்பர் சீசனில் ஒரு ஹோட்டலிலும் இடமில்லை. எண்ணூறு தொள்ளா யிரம் கச்சேரிகள் நடக்கிறது. ஜனங்கள் கேட்கிறதினால்தானே இவ்வளவு டிமாண்ட் இருக்கிறது. ஸ்பான்சர்ஷிப் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. கூட்டம் குறைந் ததாகவோ ஆர்வம் குறைந்த தாகவோ எனக்குத் தோணவில்லை. கர்நாடக சங்கீதத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கர்நாடக சங்கீதம் என்பது சூரியன் மாதிரி அதன் பிரகாசத்தை எவராலும் அழிக்க முடியாது. சூரியனின் பிரகா சம் ஒரே மாதிரித்தான் இருக்கிறது. பார்ப்பவர்களுடைய கண்கள்தான் பலதரப்பட்டு இருக்கிறது. அது மேலும் மேலும் பிரமாதமாகத்தான் போய்க் கொண்டிருக்குமே தவிர தன்னிலையை விட்டு ஒருபோதும் கீழிறங்காது.
உங்களுடைய மாணவர்கள் எங்கிருந் தெல்லாம் வருகிறார்கள்?
வெளிநாடுகளிலிருந்துகூட பெண்களும் ஆண்களும் மிருதங்கம் சொல்லிக் கொள்ள வருகிறார்கள். எனக்கு இந்தக் கலையைச் சொல்லித் தருவதில் இன்னாரென்ற வேறுபாடு களெல்லாம் பார்ப்பதில்லை. மொழி இனம் இதெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஊக்கத் தோடு வருகிறவர்கள் என்ற ஒரு இனத்தைத்தான் நான் மிகவும் விரும்புகிறேன். ஊக்கத்தோடு யார் வந்தாலும் அவர்களுக்குச் சொல்லித் தர நான் தயாராகயிருக்கிறேன்.
நீங்கள் பெற்ற உயரிய விருதுகள் என்னென்ன?
தமிழ்நாட்டில் ஏழு வருடம் ஆஸ்தான வித்துவானாக இருந்தேன். சங்கீத கலாமணி, சங்கீத கலாசிகாமணி போன்ற விருதுகளும் பெற்றிருக்கிறேன். காஞ்சிப் பெரியவர் மிருதங்க நாதமணி என்ற பட்டத்தையும் சிங்கேரி பெரியவர் மிருதங்க கலாநிதி என்ற பட்டத் தையும் கொடுத்துள்ளார்கள். அப்புறம் பத்மஸ்ரீ கொடுத்துள்ளார்கள். இப்படி இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் எனக்குக் கிடைத்துள்ளது. இந்த விருதுகளெல்லாம் பெற்றதற்காக, என்னை உருவாக்கிய என்னுடைய குருநாதர் களுக்கும் நான் வாசித்த மாபெரும் வித்து வான்களுக்கும் வணக்கத்தைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
உங்களுக்கு அடுத்த தலைமுறை மற்றும் இப்போதுள்ள இளைய தலைமுறை யினர்களிடையே எப்படி ஊடாடுகிறீர்கள்?
வருடங்கள் ஓடியிருக்கிறது. பழைய தலை முறையிலுள்ள வித்வான்கள் பலரை நான் பார்த்து விட்டேன். நான் என்ன ஒரு கொள்கையில் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று சொன் னால், என்னை மிருதங்கத் துறையில் மிகச் சிறந்தவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே இந்த நிலையை எனக்கு அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு உண்டு பண்ணித் தர வேண்டும். என்னுடைய அனுபவத்தை அவர் களுக்குக் கற்றுத் தர வேண்டும்.
இளைய தலைமுறைகளின் பாட்டு, வயலின் என எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நான் வாசித்து அவர்களை ஊக்குவிக்கிறேன். இப்போது உள்ள இளைஞர்களைப் பெரிய வித்துவான்களாக ஆக்குவதுதான் என்னுடைய தர்மம். அதற்கான முயற்சிகளில்தான் நான் தற்போது ஈடுபட்டு வருகிறேன். யார் யார் என்னிடம் மிகுந்த ஊக்கத்தோடு வந்து கேட்கிறார்களோ அவர்களிடமெல்லாம் என்னுடைய கலை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அப்படிக் கேட்டவர்களில் நிறையப் பேர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பதிலே எனக்குச் சந்தோசமாக இருக்கிறது. இளைய கலைஞர்களுக்கு என்னுடைய பரிபூரணமான ஆதரவை எப்போதும் தருவதற்கும் நான் சித்தமாகவே உள்ளேன். சந்திப்பு:சரவணன் |