வகுப்பறையிலிருந்து வெளியுலகிற்கு....
பேராசிரியர் பீட்டர் மேத்யூஸ்

யூ.எஸ் காங்கிரசுக்கு, 2002ம் வருடம் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலை சந்திக்கத் தயாராகிறார், கோவையில் பிறந்து, அமெரிக்கா வில் குடியேறி, தென் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும், பேராசிரியர் பீட்டர் மேத்யூஸ். (பீ.மே) இவருடன் சுதா வெங்கடேசன் (சு.வெ) செய்த நேர்முகத்தின் தமிழாக்கம் இங்கே தரப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலில் நம்மவர் ஜெயித்துவிட்டால், சுமார் ஐம்பது வருடங்களுக் குப் பிறகு, முதன் முதலாக, ஒரு இந்தியர், அதிலும் தமிழர் காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட பெருமை நம் எல்லோருக்கும் உண்டு..! பேராசிரியர், சைக்காலஜியில் இளநிலை பட்டமும், அரசியல் அறிவியலில் (Political Science), முதுகலைப் பட்டமும், மற்றும் ஆய்வுப் பட்டமும் பெற்றவர்

சு.வெ: உங்களோடு, உரையாடுவது குறித்து, மிகவும் மகிழ்ச்சி..! உங்களுடைய பின்னணியைப் பற்றி சற்று கூறமுடியுமா..? அதாவது நீங்கள் எங்கு பிறந்தீர்கள், எப்போது அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தீர்கள் என்ப தைப் பற்றி...!

பீ.மே: நான் பிறந்தது, தமிழ் நாட்டில், கோயம்பத்தூர் நகரில்தான். என்னுடைய பெற்றோருடன் நான் 1962-ல் அமெரிக்காவுக்கு வந்தேன். என்னுடைய தந்தை 'சைக்காலஜியில்' ஆய்வுப் படிப்புக்காக (டாக்டரேட்) விஸ்கான் ஸின் பல்கலைக் கழக்கத்திற்கு வந்தார். என்னுடைய தாயாரும் விசேஷக் கல்வி ஆசிரியராகப் பணி புரிவதற்குண்டான தகுதி யுடன் இங்கு வந்தார். என்னுடைய சிறுவயதில், நாங்கள் சென்னையில் உள்ள கீழ்பாக்கத் தில்தான் குடியிருந்தோம். திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்று மிளகாய்ப் பொடித் தூவிய மாங்காய் கீற்றுகள் வாங்கி சாப்பிட்ட, காற்றாடி விட்ட, மற்றும் பம்பரம் விளையாடிய நாட்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன. மிகவும் சந்தோஷமான நாட்கள் அவை..

சு.வெ: சுமார் எத்தனை வயது இருக்கும் அப்போது உங்களுக்கு..?

பீ.மே: எனக்கு 10 1/2 வயது இருக்கும் போதுதான் அமெரிக்காவுக்கு குடிபுகுந்தோம்.

சு.வெ: உங்கள் கல்வி பின்னணி, மற்றும் தற்போதைய வேலை இவற்றைப் பற்றிச் சற்று கூற முடியுமா..?

பீ.மே: ஆறாவது வகுப்பு வரை இந்தியாவில் தான் படித்தேன். பிறகு, மேரிலான்ட், நியூயார்க், நியூஜெர்ஸி, மிச்சிகன், மற்றும் டெக்சாஸ் என்று பல மாகாணங்களின் என் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, டல்லஸ் அருகில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பை நிறைவு செய்தேன். வட டெக்சாஸ் மாநிலத்தில் பட்டப் படிப்பு சேர்ந்து, இள நிலை பட்டப்படிப்பினை சைக்கால ஜியிலும், பின்னர் முதுகலைப் பட்டப்படிப்பினை, அரசியல் அறிவியலிலும் முடித்தேன். பிறகு, கலி·போர்னியா மாநிலத்துக்குக் குடிபெயர்ந்தேன். வட கலிபோர்னியாவில், சான்பிரான்சிஸ்கோ நகரில், 1976 முதல் மூன்று வருடங்களுக்கு, கல்லூரி விரிவுரையாளராகப் பணி செய்தேன். லாஸ் ஆல்டோஸ் நகரில் உள்ள foothill கல்லூரியிலும் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றி னேன். அப்போது, வட ·பேர் ஓக்ஸ் அட்வைசரி கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக் கப்பட்டேன். தவிர, ஸேன் மெட்டேயோ கவுண்டி திட்ட அமைப்பு கமிஷனினும் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றேன். இந்த வாய்ப்பின் மூலமாக, நகரக் குடியிருப்பு, போக்குவரத்து, மற்றும் குடியிருப்பு இடப் பாகுபாடு (zoning) போன்ற பல விஷயங்களில் அனுபவம் கிடைத்தது. பின்பு, தென் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்து, லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் வசிக்க ஆரம்பித்தேன். இங்கு, இருபது வருடங்களாக வசித்து வருகிறேன். கடந்த பதினோறு வருடங்களாக, லாங் பீச் பகுதியில் வசித்து வருகிறேன்.

சு.வெ: இப்போது எங்கு வேலை செய் கிறீர்கள்?

பீ.மே: நான் இப்போது, சைப்ரஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் பேராசிரியராக பணி புரிகிறேன். பல்நாடுகளுக்கிடையேயான உறவுகள், குறிப்பாக, அமெரிக்க அரசாங்கத்தில் அவற்றின் முக்கியப் பங்கு போன்ற பாடங்களை 16 வருடமாக நடத்தி வருகிறேன். மொத் தத்தில், 16 வருடமாக, சந்தோஷமான வேலை யனுபவம். தவிர கலிபோர்னியா ஸ்டேட் - Fullerton பல்கலைக் கழகத்திலும், பகுதிநேரப் பேராசிரியராகப் பணிபுரிகின்றேன். என்னுடைய ஆய்வுப்படிப்பினை, தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்தான் செய்தேன்.. அதுவும், அரசியலுக்கு முழு ஈடுபாடு கொள்வதற்கு முன்பாக..!

சு.வெ: அமெரிக்க அரசியலில் நுழைய வேண்டும் என்னும் எண்ணம் எப்போது, எதனால் உங்களுக்குத் தோன்றியது..?

பீ.மே: நான் எப்போதுமே சில சமூக விஷயங்களிலும், பிரச்சினைகளிலும், நாட்டம் செலுத்தி வந்திருக்கிறேன். தவிரவும், என்னுடை பெற்றோர்களும், என்னை அவ்வாறே ஊக்குவித்திருக்கிறார்கள். அவர்களுக்குமே சமூக சேவையில் நாட்டமும், அனுபமும் உண்டு. என் தந்தை, வசதியற்றவர்களுக்கு, இலவசக் கல்வி அளிப்பதற்காக, இந்தியாவில், பள்ளி ஒன்றை நிறுவியவர்... அதனால் வளரும் பருவத்திலேயே, சமூகச் சேவை என்னுடைய உள்ளத்தில் விதைக்கப்பட்டுவிட்டது. கல்லூரி நாட்களில், சமூகத்தின், பலவேறு துறைகளில், விஷயங்களில், மட்டங்களில் நிலவும் இடைவெளிகளை கவனித்து வந்திருக்கிறேன். உதாரணமாக, ஒரே பகுதியில், சில மைல்கள் இடைவெளியே உள்ள இரு பள்ளிகளை எடுத்துக் கொண்டால், எத்தனை வேறுபாடுகள்..? ஒரு பள்ளியில், சாதாரண புத்தகங்கள் வாங்கமுடியாத அளவுக்கு, பண முடை..! மற்றொரு பள்ளியிலோ, புத்தம் புது, தொழில் நுட்ப வசதிகளோடு கூடிய பணம் படைத்தவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய வசதிகள். இத்தகைய வேறுபாடுகளை, எல்லா இடங்களிலும், எல்லா விஷயங்களிலும் களைய வேண்டும், என்கிற எண்ணம்தான் என்னை அரசியலில் நுழையச் செய்தது. எல்லோருக்கும் சம உரிமைகளும், சம வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும். முதலில் என் தந்தையின் விருப்பத்துக்காக, சைக்காலஜிதான் படித்தேன். அதே துறையில் இருந்திருந்தால், தனிப்பட்ட மனிதர்களுக்கு உதவியிருப்பேன்..! பல்நாட்டு உறவுகளைப் பற்றி படிக்கும் போது, ஒத்த கருத்துக்களையும், அரசாங்க நிர்வாகத்தையும் உடைய நாடுகளின் இடையே உள்ள உறவுகளைப் பற்றி கவனிக்க நேர்ந்தது. அரசாங்கத்தின் கொள்கைகளால் தனிப்பட்ட மக்கள் கூட்டம், உரிய முறையில் பலனடைந்தோ அல்லது பாதிக்கப்பட்டோ இருப்பதையும் ஊன்றி கவனிக்க நேர்ந்தது. இவற்றினால், அரசாங்கத்தின் ஒரு அங்கமாக, அத்தகைய கொள்கைகள் உருவாகும் சமயத்திலேயே, மக்களுக்கு உதவும் வகையில் உருவாக்கிட, பணி ஆற்ற வேண்டுமென்றும் தோன்றியது. கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் சமமாகச் சென்றடைய வேண்டும்.. முக்கியமாக, பள்ளி செல்லும் வயது, சிறுவர், சிறுமியர்களுக்கு, சமமான, நேர்மையான வாய்ப்புகளுக்கு வழிசெய்யப்படவேண்டும்... இத்தகைய எண்ணங்கள்தான் என்னை அரசியலுக்கு இழுத்துவந்தன. தவிரவும் நான் பேராசிரியராக இருப்பதும், அரசியல் பாடத்தில் தானே..? வகுப்பறையில் நடத்துவதை, வெளியுலகிலும் சென்று செயலாக்கமாக்க வேண்டும் என்னும் ஆவலும் ஒரு காரணம்..!

சு.வெ: நீங்கள் கூறிய பிரச்சினைகளைத் தவிர, அமெரிக்க சமூகத்தை ஒட்டு மொத்தமாக பாதிக்கும், பிற பிரச்சி னைகளாக, நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்..?

பீ.மே: சுமார் 44 மில்லியன் அமெரிக்கர் களுக்கு அடிப்படை மருத்துவசதிக்கான காப்பீடு (Insurance) கிடையாது. தவிர சுமார் 1 மில்லியன் அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும், மருத்துவ காப்பீடினை இழக்கிறார்கள். கம்பெனிகள், தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக அதிகம் செலவு செய்ய முடியாததால், முன்வராததால், HMOக்கள், மருத்துவ வசதி களையும், சேவைகளையும் குறைத்து விட்டனர். இவையெல்லாம், பொதுமக்களின் அடிப்படை மருத்துவ காப்புரிமையில் கைவைப்பதாகும். இதனால், சிறுவர், சிறுமியருக்கு அடிப்படை மருத்துவசதிகள், உரிய நேரத்தில், தேவையான அளவுக்குக் கிடைக்காததால், வருடத்துக்கு, இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டே போகிறது. மிகச் சிறந்த மருத்துவ தொழில்நுட்பம், அமெரிக்காவில் இருப்பதால், அது சேரவேண்டியவர்களை சென்றடைய வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மற்றொறு பெரிய பிரச்சினை. மார்ச் 2001 -ல் தொடங்கிய மந்தத் தன்மை, நாட்டில் ஒட்டு மொத்தமாக, பொருளாதார முடக்கத்துக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டது. செப்டம்பர் 11ம் தேதிக்குப் பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. பல அமெரிக்க மக்கள், வேலை இழந்து தவிக்கிறார்கள். அதனால் வருமானக் குறைவும், அத்தியாவசியானமான தேவைகளைகூட நிறைவு செய்ய இயலாமையும் இருக்கின்றன. உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர், வேலை இழந்து தவிக்கின் றனர். எல்லா அமெ ரிக்கர்களும், நன் றாக வருமானம் வரக்கூடிய வகை யிலே நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டும்.. இதுவும் முக்கியமான பிரச்சி னைகளில் ஒன்று. கல்வி..இதுவும் முக்கியமாக கவனிக் கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று. ஜெர்மனி, பிரான்ஸ், மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் போல ஆரம்பகாலக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை எல்லோருக்கும், இலவசமாகவும், கட்டாயமாகவும் ஆக்க வேண்டும்.. இந்தியாவில் கூட அரசாங்கம் உயர்கல்விக்கு சலுகைகள் வழங்குகிறதில்லையா..?

சு.வெ: ஆமாம்... இந்தியாவில், தொழில் கல்விக் கல்லூரிகளெல்லாம், அரசாங்க ஆதரவில் நடப்பதால், கட்டணச்சலுகை சாத்தியமாக உள்ளது.

பீ.மே: அதேபோல் அமெரிக்காவிலும் செய்யவேண்டும். உயர் தொழில் கல்வி, மற்றும் மருத்துவப் படிப்பவர்கள், கல்லூரியை விட்டு வெளிவரும் போதே, 2 லட்சம் டாலர்கள் கடனோடு வருவது தடுக்கப்படவேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஆசிரிய-மாணவ விகிதாச்சாரம் போதுமான அளவு குறைவாக இருக்கவேண்டும், இருபது மாணவர்களுக்கு மேல், ஒர் ஆசிரியருக்குக்கீழ் இருக்கக் கூடாது. கலிபோர்னியாவில் தற்போது, சராசரியாக 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று இருக்கிறது.. ஆங்கிலம் பேசும் நாடுகளான, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்தி ரேலியா போன்ற நாடுகளிலிருந்து, ஆசிரியர்கள் தருவித்து ஆசிரியர்கள் பற்றாக் குறையைப் போக்கவேண்டும், அதாவது, அமெரிக்கா போதிய ஆசிரியர்களை உருவாக்கும் வரை..

சு.வெ: அதாவது, தற்போது தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு வழங்கப்படும் விசா போல, இல்லையா..?

பீ.மே: மிகவும் சரி. காங்கிரஸ் மூலமாக, சட்டமாக இவற்றையெல்லாம் கொண்டுவரப் பாடுபட விரும்புகிறேன். அமெரிக்க மக்கள், ஆசிரியப் பயிற்சி பெறும் போது, 'ஸ்காலர் ஷிப்'கள் (உதவித் தொகை) வழங்கப் படவேண்டும். சிறு தொழில் வளர்ச்சி, மிகவும் அவசியமான ஒன்று, அமெரிக்க பொருளாதாரத்திற்கு. 2/3 பங்கு அமெரிக்கத் தொழிலாளர்கள், சிறு தொழிலை நம்பித்தான் இருக்கிறார்கள். சிறுதொழில் நிறுவனர்களுக்கு, அரசாங்க கொள்கைகள் உதவக்கூடிய வகையில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் குறைந்த வட்டி யுடன் கூடிய கடனுதவி வழங்கப்படவேண்டும். மற்றொரு பிரச்சினை.. சுற்றுப்புறச் சூழல் மாசு படுதல். நான் இப்போது, 'ஹைபிரிட்' - அதாவது, மின்சாரம் மற்றும், பெட்ரோல் இரண்டின் துணையோடு ஓடக் கூடிய காரைத்தான் ஓட்டுகிறேன். இது மாசுக் கட்டுப்பாட்டுக்கு, ஓரளவு உதவும். இதை போன்ற, அல்லது சிறந்த தொழில்நுட்பம் அமெரிக்காவிலேயே வளர்க் கப்பட வேண்டும். G.M, Ford போன்ற கம்பெனி கள் இத்தகைய தொழில் நுட்பங்களோடு கூடிய கார்கள் உற்பத்தியில் ஈடுபட, அரசாங்கம் தொழில் நுட்ப அமைப்புகளையும், கோட்பாடு களையும், வகுக்கவேண்டும்.

சு.வெ: இந்திய அமெரிக்கர்களின் பிரத்தியேக பிரச்சினைகளைப்பற்றி, தற்காலிக வேலை நிமித்த விசாவில் இருக்கும் தொழில் நுட்ப வல்லுநர்களின் பிரச்சினைகளைப் பற்றி ஏதாவது கூறமுடியுமா..?

பீ.மே: இந்தியர்கள், இந்த நாட்டில் குடியேறியுள்ள, பிற நாட்டவரைப்போல, பல வாய்ப்புகளைப் பெற்று, அவற்றை வெற்றி கரமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவர்களுள் பலரும் மிகவும் படித்தவர்கள். கடினமாக உழைப்பதற்கு அஞ்சாதவர்கள். ஆனாலும் நாம் 100% இந்நாட்டில் ஒத்துக் கொள்ளப்படவில்லை..! அதற்கு முக்கிய காரணம், நமக்கு ஒரு சரியான பிரதி நிதித்துவம், அமெரிக்க அரசாங்கத்தில் அமையாதது தான். நம்மில் சிலராவது அமெ ரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளாக, காங்கிர ஸிலோ, செனட்டிலோ இடம் பெற்றாலோ தவிர, நாம் இந்நாட்டில் விருந்தாளிகளாகத் தான் இருப்போம், நடத்தப்படுவோம். இப்படிப்பட்ட அங்கீகாரமும், பலநாட்டிலிருந்து இங்கு குடியேரியவர்கள் மூலம் நமக்கு கிடைக்க வேண்டும். அப்படி நடந்தால்தான், அமெரிக்கா வில் நம்முடைய உரிமைகள் நிலை நாட்டப்படும்.. இதற்குத் தேவை சரியான அரசியல் தலைமை... நான் தேர்ந்தெடுக்கப் பட்டால், எல்லா அமெரிக்கர்களின் உரிமைகளுக்கும், பிரச்சினை களுக்கும் பாடு படுவேன். தவிர, இந்தியா வுடனான தொழில் நுட்ப உறவு, வர்த்தகம், அரசாங்க மட்ட பல்முனை ஒத்துழைப்புகள் இவற்றுக்காகவும் பாடுபடுவேன். இந்தியா வுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அயல் நாட்டுக் கொள்கையில், சுமுக நிலைமைக்குப் பாடு படுவேன். தற்போதைய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே அணியில் ஒருங்கிணந்து செயலாற்ற வேண்டிய நாடுகள்..அமெரிக்காவின் இயல்பான நேச நாடு இந்தியா..! இந்தியர்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழாவண்ணம், காங்கிரஸ் அங்கத்தினன் என்னும் முறையிலே என்னாலான தைச் செய்வேன். மைனாரிட்டி மக்களுக் கெதிரான போக்கை நீக்க, காங்கிரஸ் அங்கத்தினனாக, என்னால் இயன்றதை செய்யமுடியும்.

அமெரிக்கா, மிகவும் சிறந்த நாடு.. உலகின் பல மூலைகளிலிருந்து, சிறந்த அறிவாளிகளை வரவழைத்து, அவர்களுக்கு ஏற்ற வாய்ப்புகளை வழங்கியுள்ளது... பல்வேறு கலாச்சாரங்களும் இங்கு சங்கமித்து, புதிய கலாச்சாரத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், அது நாள் தோறும் வளர்வதற்கு, அமெரிக்க அரசியல் சாசனமும் உறுதி அளித்துள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய, பல ஆயிர ஆண்டுகளாக, தொடர்ச்சியாக வளர்ந்து வந்திருக்கக்கூடிய மரபுகள், மற்றும் கலாச்சாரப் பின்னணியுடைய நாடு. அமெரிக்காவுக்கு எத்தனையோ வழிகளில் முன்னோடியாக இருக்கத் தகுதிவாய்ந்த நாடு. எனவே, அமெரிக்கர்கள் இந்த பன்னாட்டு கலாச்சார வித்தியாசங்களில் பெருமை கொள்ளவேண்டும். பிரசிடென்ட் கென்னடி இதை உணர்ந்துதான், "அமெரிக்கா குடியேறி யவர்களின் நாடு" என்று சொன்னார். நானும் அதை உறுதியாக நம்புகிறேன். ஆறுமாதங் களுக்கு முன்பைவிட, இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்க அரசியலில் நேரடி ஈடுபாடும் பங்கேற்பும் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.

சு.வெ: அமெரிக்க காங்கிரஸ் அவையில் உறுப்பினராவதற்கான காரணப் பட்டி யலைச் சுருக்கமாகக் கூறமுடியுமா..?

பீ,மே: 1. இந்திய அமெரிக்கர்கள், வித்தியாச மாக நடத்தப்படாமல், அமெரிக்க மக்களாக நடத்தப்படவேண்டும்.

2. அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவுகளை ஆக்க பூர்வமாக, உறுதியாக நிலை நாட்டுவது, தொழில், வர்த்தகம், பொருளாதார ரீதியாக, மற்றும் கொள்கை அடிப்படையிலும் ஒன்றுபட்டவை என்று உணர வைப்பது.

3.இந்தியர்களுக்கான தொழில் விசா கொடுக்கும் முறையை இலகுவாக்கி, இந்திய தொழிலதிபர்கள், அமெரிக்காவில், வெற்றி கரமாக, தங்கள் தொழில்களைப் பெருக்கு வதற்கும், அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வழி செய்தல்.

4.கல்வி சீர்திருத்தங்களைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன்.. குடியேறியவர்களின் குடும்பங் கள் எளிதில் ஒன்று சேரும் வகையில் சட்டம் இயற்ற முயற்சிப்பது.

சு.வெ: நீங்கள் எந்த காங்கிரஸ் மாவட்டத்தின் பிரதிநிதியாகத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்..?

பீ.மே:நான் போட்டியிடப்போகும் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம். ஏனெனில் மாவட்டப் பிரிவுகள் பத்து வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றன. இப்போதைய மாவட்டம் 37 வது.. இது பழைய மாவட்டதின் 2/3 பகுதியைக் கொண்டது. 3 வருடத்துக்கு முன், (1998), 38 வது காங் கிரஸ் மாவட்டத்தின் சார்பின், தேர்தலில் 45% ஓட்டுகளைப் பெற்றேன்.

சு.வெ: உங்கள் மாவட்டத்தில் நிறைய இந்திய அமெரிக்கர்கள் இல்லையே..?

பீ.மே: நிறைய பேர் இல்லை என்பது உண்மைதான்.. 50,000 பேரில், ஆயிரமோ அல்லது ஆயிரத்தைநூறு இந்தியர்கள்தாம் இருப்பார்கள். ஆனாலும் பிற மைனாரிட்டி மக்கள் உள்ளனர்.

சு.வெ: இந்திய அமெரிக்கர் களைத் தவிர மற்ற மைனாரிட்டி வகுப்பினரும் உங்களை ஆதரிக்கிறார்களா..?

பீ.மே: நிச்சயமாக..! 86% சதவிகித மைனாரிட் டியினர், என்னை ஆதரிக்கிறார்கள்.. இருந் தாலும், எவ்வளவு இடங்களில் நான் பேசினாலும், தேர்தல் முடியும் வரை, தொடர்ச்சியாக, விழிப்புணர்ச்சியை தர வேண்டும் வாக்காளர் களுக்கு.

சு.வெ: இந்திய அமெரிக்க வம்சா வழியினர், உங்களுக்கு எவ்விதத்தில் உதவி செய்ய முடியும்..?

பீ.மே: பல விதங்களில்..! வாக்காளர்களைத் திரட்டித் தருவதில்... எனக்கு ஆதரவாகப் பதிவு செய்தல் மூலமாக..கட்டாயம் எனக்கு உதவலாம்.

என்னுடைய் தேர்தல் செலவுகளுக்காக, தங்கள் வசதிக்கேற்ப, இந்திய அமெரிக்கர்கள் பொருளுதவி செய்யலாம்.. 50 டாலர்களிலிருந்து, 100, 1000 வரைக்கும், தனிப்பட்ட மனிதர்கள், என்னுடை தேர்தல் நிதிக்கு நன் கொடை அளிக்கலாம். நன்கொடை அளிப்பவர்கள் கிரீன் கார்டு வைத்திருக்க வேண்டும்.

தகவல் தபால் மற்றும், பத்திரிக்கைகள், டீ.வி. என்று, மொத்தமாக, 1இலட்சம் டாலர்களுக்கு தேவையிருக்கிறது. நான் வெற்றி பெற வாய்ப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளன. இந்த 1 இலட்சம் டாலர்களையும் நன்கொடை மூலமாக, வசூலிக்க எண்ணியுள்ளோம்... இத்தனையும், டிசம்பர் இறுதிகுள்ளாகவோ அல்லது, ஜனவரி 15 தேதிக்குள்ளாகவோ முடித்தாக வேண்டும்..

நன்கொடை அனுப்ப முடிந்தவர்கள், கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்...

Mathews for Congress
P.o. Box 2857
Long Beach,
California 90801-2857

என்னோடு நேரடித் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள், என்னுடைய செல் நம்பரில் (562-234-3319) என்னைத் தொடர்பு கொள்ளலாம். ஏற்கனவே, எனக்கு, சில பள்ளி மாணவர் களும், கல்லூரி மாணவர்களும் உதவி புரிந்து வருகிறார்கள்..

சு.வெ: காங்கிரஸ் உறுப்பினராக, இந்திய- அமெரிக்க உறவைப் பொருத்தவரை, உங்களுடைய குறிப்பிட்ட பங்கு என்ன வாக இருக்கும்..?

பீ.மே: முன்னமே இதற்கு பதில் சொல்லி யிருந்தாலும், தற்போதைய நிலவரத்தில், கலாச் சார அளவிலும், கொள்கை அளவிலும், ஒரே அணியில் இருக்கக்கூடிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள், உலகு தழுவிய பயங்கர வாதத்திற்கு எதிராக ஒன்று சேருவது அவசியம்....இந்தியா, உலகின் மிகப்பெரிய குடியரசு.. அமெரிக்கா, உலகின் பழைமை யான,முதிர்ந்த குடியரசு.. காங்கிரஸ் உறுப்பி னராக, அமெரிக்காவில் வளர்ந்த இந்தியன் என்னும் முறையில் என்னால், மிகவும் புரிதலோடு செயல் படமுடியும். எனக்கு முன்னால், 1956ல் டாக்டர் திலீப் சிங் காங்கிரசுக்கு மூன்றுமுறைத் தேர்ந்தெடுக்கப்பட்டார்... அவர் இந்தியாவிலி ருந்து, 20வது வயதில், கணிதத்தில் டாக்டரேட் வாங்க, பெர்க்லி பல்கலைக்கழகத்திற்கு வந்தார்.. தென் கலிபோர்னியாவில் தான் குடியிருந்தார். அவர்தான் எனக்கு முன்னோடி.. அவருக்குப் பிறகு காங்கிரசுக்கு தேர்ந்தெடுக் கப்பட உள்ள முதல் இந்தியன் நானாகத்தான் இருப்பேன்..இது அமெரிக்காவில் வாழும் அனைத்து இந்தியர்களும் மகிழ வேண்டிய ஒன்று.... ஏற்கனவே.. 1998-ல் கலிபோர்னியா ப்ரைமரியிலும் வென்றிருக்கிறேன்..மார்ச் மாதம் 5ம் தேதிக்காக காத்திருக்கிறேன்.

சு.வெ: நன்றி பீட்டர் மேத்தியூஸ் அவர்களே.. உங்களோடு சந்தித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி...! நீங்கள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்..

பீ.மே: நன்றி சுதா..

சந்திப்பு : சுதா வெங்கடேசன்
தொகுப்புதவி : அஷோக் சுப்ரமணியம்

******


நண்பர்களே..!

உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நம்மவர் ஒருவர் அமெரிக்க காங்கிரசுக்கு செல்ல முயற்சிக்கிறார். முற்றிலும் தகுதி வாய்ந்த வேட்பாளர். அவர் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துவோம்.

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்... நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்..

நிதி உதவி இல்லையெனிலும், உங்களின் தார்மீக ஆதரவு கட்டாயம் அவருக்குத் தேவை, இந்திய அமெரிக்கர் களின் ஒருங்கிணந்த குரலாக காங்கிரசில் ஒலிப்பதற்கு....

பேராசிரியர் பீட்டர் மேத்தியூஸ் வெற்றி பெற மீண்டும் நம்முடைய நல்வாழ்த்துக்கள்...

© TamilOnline.com