உலகு தழுவி வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழில் ஈடுபாடு உள்ள மற்ற மொழியினருக்கும், தமிழ் மொழியைக் கற்கவும் தமிழர் வரலாறு, கலை இலக்கியம் பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிக்கும் நோக்கத்தோடு தமிழிணையப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நோக்கம், பயன்பாடு மற்றும் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள, தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் இயக்குனர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களை சந்தித்து உரையாடியதிலிருந்து...
தமிழிணையப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?
இன்றைய நிலைமையில் தமிழர்கள் சுமார் 50 நாடுகளில் பரவலாக வசித்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னமே இங்கிருந்து புலம் பெயர்ந்து போனவர்கள் மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாக தொழில் நிமித்தமாக சென்றவர்களும் இந்த வகையில் அடங்குவர். அங்கு சென்றுள்ள தமிழர்கள் தங்களது தாய்மொழியைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதற்கு மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்கள். தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தமிழ்க் கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் முறை இவைகள் பற்றியும் கற்றுத் தருவதற்கு ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு இவைகளைக் கற்றுக் கொள்வதற்கான போதிய வாய்ப்புக்கள் அவர்கள் வசிக்கும் நாடுகளில் பெரும்பாலும் இல்லையென்று சொல்லலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்று இப்போதும் வசித்துவரும் தமிழர்களுக்கு தமிழ்ச் சைவப் பாடல்களைப் பாடத் தெரியும். ஆனால் தமிழ் எழுத்துருக்களை இனங்கண்டு வாசிக்க இயலாது. அவர்களுக்கு வாய்ப்புக் களும் ஏற்படவில்லை. இந்தச் சூழ்நிலையின் பின்னணியோடு தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் வழியாக தமிழ்மொழி மற்றும் தமிழக வாழ்வியல் தொடர்பாக கற்றுத் தரும் சேவையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதுதான் அடிப்படையான நோக்கம்.
தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போது உதயமானது?
1997-இல் முதல் தமிழிணைய மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது தமிழில் பல குறியீட்டு முறைகளும், பல விசைப் பலகைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. பலதரப்பட்ட குறியீட்டு முறைகள் மற்றும் விசைப் பலகைகளைத் தரப்படுத்த வேண்டும் என்பதும் அந்தப் பணியைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதும் மாநாட்டில் கோரிக்கை களாக முன்வைக்கப்பட்டன. அதையடுத்து அடுத்த மாநாடு சென்னையில் நடத்தப் பெற்றது. இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட கணிப் பொறி வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடந்த தமிழிணைய மாநாட்டில் தரப்படுத்துதல் பற்றி விவாதிக்கப்பட்டது. அதோடு இணையம் வழியாக தமிழ்க் கல்வியளிப்பது என்கிற யோசனையும் முன் வைக்கப்பட்டது. அதையேற்று அன்றைய தமிழக முதல்வர் 'அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை' என்கிற பிரகடனத்தோடு தமிழிணையப் பல்கலைக் கழகம் தொடங்கப்படுமென அறிவித்தார். அதன்படி முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
தமிழிணைப் பல்கலைக் கழகச் சங்க மொன்றும் ஆரம்பிக்கப்பட்டு 2000-ஆம் ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்டது. ஜூலை மாதம் நான் இயக்குனராகப் பொறுப்பேற்றுச் செயல்பட ஆரம்பித்தேன். பல்கலைக் கழகத் தை அன்றைய முதல்வர் தொடங்கி வைத்தார். இதுதான் உதயமானதன் பின்னணி.
முதல் கட்டப் பணிகளை எப்படித் திட்டமிட்டு மேற்கொண்டீர்கள்?
முதல்கட்டப் பணிகளாக கல்வி, நூலகம் என இரு பிரிவுகளை எடுத்துக் கொண்டோம். கல்வி என்னும் பிரிவின் கீழ் சான்றிதழ், பட்டயம், மேற்பட்டயம், பட்டம் என நான்கு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் சான்றிதழ் படிப்பில் இடைநிலை, அடிப்படை நிலை ஆகியவை முழுமையாகச் செயல்பட ஆரம்பித்து விட்டன. பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளுக்கான பாடங்களை உருவாக்கும் பணி தற்போதும் தொடர்ந்து வருகிறது. தற்போது பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான 121 தாள்கள், 504 பாடங்களைத் தொகுக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ 25க்கும் மேற்பட்ட தகுதியும் திறமையும் வாய்ந்த பேராசிரியர்கள் பாடங்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 105 பாடங்களுக் கான பணி முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களுக்குள் அனைத்துப் பணியும் நிறைவு பெற்று விடும்.
நூலகம் என்னும் பகுதியின் கீழ் சங்கம் முதல் இன்றை நவீன இலக்கியங்கள் வரைத் தொகுக்கத் திட்டமிட்டுள்ளோம். தொல் காப்பியம், நன்னூல், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு ஆகியவைகளைத் தொகுத்து முடித்து விட்டோம். தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களை ஒலி வடிவிலும் இடம்பெறச் செய்துள்ளோம்.
தமிழிணையப் பல்கலைக் கழகத்துக்கு வரவேற்பு எப்படியுள்ளது?
நல்ல வரவேற்பிருக்கிறது. இதுவரை தொடங் கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 58 நாடுகளிலிருந்து 3000 பேர் பதிவு செய்து தளத்தைப் பார்வையிட்டுள்ளனர். நூலகம் பகுதியில் எல்லோரும் சென்று தகவல்களைப் பெற்றுக் கொள்ள முன்பு அனுமதிக்கப் பட்டிருந்தது. ஆனால் 6-02-2002-இலிருந்து கட்டணம் கட்டியவர்கள் மட்டுமே அப் பகுதிகளுக்குள் செல்லுமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பிருக்கும் என்று நம்புகிறேன். மேலும் பல நாடுகளிலும் தமிழிணையப் பல்கலைக் கழகத்துக்கான தொடர்பு மையங்கள் அமைக்கபட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தேர்வுகள் எல்லாம் தொடர்பு மையங்கள் வழியாக நடத்தப்படத் திட்டமிட்டுள்ளோம்.
தொடர்பு மையங்கள் அமைக்கும் பணியின் முதற்கட்டமாக தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் சென்று வந்துள்ளேன். விரைவில் மற்ற நாடு களுக்கும் சென்று அங்குள்ள ஆர்வமுள்ள தமிழ் அமைப்புகளோடு இணைந்து தொடர்பு மையங்கள் அமைக்கும் பணியைத் தொடங்க உள்ளோம்.
கட்டணம் கட்டி நுழைவது என்பதற்கு வரவேற்பு எப்படியுள்ளது?
வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் தமிழ் மொழியைக் கற்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் நேரிடையான பயணத்தின் போது தெரிந்து கொண்டேன். அதனால் கட்டணம் கட்டிப் படிப்பது என்பதில் ஏதும் சிரமங்கள் இருக்காது என்றே நினைக்கிறேன். அதுவுமில்லாமல் கட்டணம் என்று சொன்னால் அது ஒன்றும் பெரிய தொகையெல்லாம் கிடையாது. 5டாலர், 8டாலர் என்று மிகச் சிறிய தொகைதான். தமிழ் ஆர்வம் மிக்கவர்களால் கொடுக்க முடிந்த தொகைதான் இது.
கனடாவில் மட்டும் 20,000 பேர், மேற்கு ஜெர்மனியில் 5000 பேர், மொரீசியஸில் 10,000க்கும் மேற்பட்டோர், அமெரிக்காவில் 10,000 பேர் தமிழிணையப் பல்கலைக் கழகத்தில் இணைவதற்கு ஆர்வமாக உள்ளார் கள் என்று கேள்விப்பட்டோம். இது நடக்கிற பட்சத்தில் தமிழிணையப் பல்கலைக் கழகம் ஒரு புரட்சியாகத்தான் அமையும். இவ்வளவு பேர் ஆர்வமாக உள்ள நிலையில் கட்டணம் ஒரு பிரச்சனையாக இருக்கப் போவதில்லை.
தேர்வு முறைகளை எப்படித் திட்ட மிட்டுள்ளீர்கள்?
இரண்டு கட்டமாக தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இணையம் வழி தேர்வு என்பது ஒன்று; இரண்டாவது வாய்வழித் தேர்வுகள். ழகர, ளகர வேற்றுமைகளை எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கு வாய்வழித் தேர்வு நடத்த வேண்டியது அவசியம். இந்த வாய்வழித் தேர்வை அந்தந்த நாடுகளிலுள்ள தொடர்பு மையங்கள் நடத்தும்.
இணையம் வழி தேர்வில் இப்போதைக்கு OBJECTIVE முறையில்தான் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் தேர்வுகளை தொடர்பு மையங்கள் வழியாகத் தான் எழுத முடியும். அதிலும் தொடர்பு மையங்களில் உள்ள கணிப்பொறி வழியாகத் தான் எழுத முடியும். ஒரு மாணவருக்கு தரப்படும் கேள்வித்தாள் மற்ற மாணவருக்குக் கிடைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கேள்வி களுக்கான பதில்களும் கணிப்பொறியிலேயே உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். அதனால் இந்தத் தேர்வு முறையால் எந்தப் பிரச்சனைகளுமில்லை.
அடுத்ததாக கட்டுரை எழுதுவது அடிப்படை யிலான தேர்வு முறை நடத்துவது பற்றியும் திட்டமிட்டு வருகிறோம். தமிழ் எழுத்துருக்களை மாணவர்களுக்குக் கொடுத்து அதன்வழியாக அவர்களே தட்டச்சு செய்வது போல வடிவ மைக்க இருக்கிறோம். அவர்கள் எழுதிய பதிலை இங்குள்ள ஆசிரியர்களிடம் கொடுத்து மதிப்பிடச் செய்து மதிப்பெண்களை வழங்க உள்ளோம்.
தேர்வு பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் எவ்வாறு அனுப்பப்படும்?
தேர்வு பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் கள் அஞ்சல்வழி அனுப்பி வைக்கப்படும். இந்தச் சான்றிதழ்களை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கும். தேர்வு பெற்றவர்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப் படுவர். இந்தத் தேர்வுகளை வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டும்தான் எழுத வேண்டும் என்றில்லை. இங்குள்ள தமிழர்கள்கூட எழுத லாம். சான்றிதழ்களும் பெறலாம். இது குறித்து இதழ்கள் பரவலாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென்பது என்னுடைய வேண்டுகோள்.
தமிழக அரசு எந்த வகைகளிலெல்லாம் பல்கலைக் கழகப் பணிகளுக்கு உறுதுணை யாகச் செயல்படுகிறது?
உலகெல்லாம் பரவி வாழும் தமிழர்களுக்குச் சேவை புரிய வேண்டுமென்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக் கழகத்திற்கு தமிழக அரசு எல்லா வகைகளிலும் உதவி செய்துவருகிறது. முதற்கட்டமாக ஒரு கோடியே எழுபது இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் திட்டப் பணிகளுக்காக ஏற்கனவே அரசு தந்திருந்தது. இப்போது அடுத்த கட்டப் பணிகளுக்காக 2கோடி ரூபாய் கேட்டிருக் கிறோம். கணித் தமிழ் தொடர்பான பணி களுக்கு வேண்டிய தொழில்நுட்ப உதவி மற்றும் தார்மீக ரீதியிலான ஆதரவை அரசு எங்களுக்கு அளித்து வருகிறது.
அடுத்த கட்டப் பணிகள் என்னென்ன?
முதற்கட்டமாக தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களைப் பயிற்றுவிக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம். இதுதான் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதலில் தேவையான ஒன்றாக இருக்கிறது. எனவே இதில் முழுமையாக நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த கட்டமாக தமிழ் வழி இதழியல், தமிழ் வழி வணிகம், தமிழ் வழி அறிவியல்... போன்றவைகளைக் கற்றுத் தரும்படியான பல பணிகளையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
சந்திப்பு-படங்கள் : சரவணன் |