ஒரு இசைக் கலைஞனாக ரேடியோவுடனான எனது அனுபவம், நான் எனது தந்தையுடன் ஆகாஷவாணி திருவனந்தபுரம், சென்னை (அப்போது மெட்ராஸ் பிராட்காஸ்டிங் கார்போரேஷன் என அழைக்கப் பட்டது) மற்றும் ஆகாஷவாணி மைசூர் ஆகிய வற்றிற்கு ஒரு குழந்தை கலைஞனாக அவருக்கு மிருந்தங்கத்தில் பக்க வாத்தியம் வாசிக்கத் தொடங்கியபோது ஆரம்பித்தது. மொத்தமாக ரூபாய் 30 எனக்குச் சம்பளமாகக் கொடுத்ததாக ஞாபகம். நேரடி ஒலிபரப்பின் (live) போது வாசிப்பது ஒரு உற்சாகமான அனுபவம்; ஆனால் ஒலிபரப்பு நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் சிகப்பு விளக்கு எறியத் தொடங்கியவுடன் ஒரு வித பயம் தொற்றிக் கொள்ளும். இன்றும் கூட மூத்தக் கலைஞர்களாகிய நாங்கள் AIR அல்லது DD ஸ்டூடியோக்களுக்குச் செல்கையில் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு ஏற்படுவது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. பூமியின் இழுவை விசையிலிருந்து விடுபட்டு படைப்புத்திறனில் புகுந்து, எப்பொழுதும் இருக்கும் இறைவனின் அருளால் (நாதமாக உலவும் இறைவன்), எங்கள் பயம் நீங்கி இன்னொரு உலகில் சஞ்சரிப்போம்.
சுதந்திரத்திற்கு முந்திய காலங்கள் குழப்பம் நிறைந்தவை - ஆச்சாரம் - conservatism - சுதந்திரம் அடைய வேண்டும் என்கிற தீராத வெறி, தேச பிதா காந்திஜி, திலகர், படேல், கோகலே மற்றும் பலரால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் இயக்கம் எப்பொழுதும் அடக்குமுறையை சந்திக்க வேண்டிய நிலை மற்றும் நேருஜி, ராஜாஜி, பெரியார் போன்றவர்கள் செய்தித் தாள்கள் மூலம் உணர்த்திய உண்மை நிலை - இவை அனைத்தும் மனதில் பதிந்துவிடக்கூடிய வயதில் (இளைஞனாக) 1942ல் நான் இருந்தேன் - இந்தக் காலக் கட்டத்தில் கேரளாவில் கம்யூனிஸம் முழு வீச்சில் இருந்தது. நான் எனது படிப்பினை எர்ணாக்குளம் அரசினர் பள்ளியிலும், மகாராஜா கல்லூரியிலும் பயின்றேன். அந்நாட்களில், கையில் கொடி ஏந்தி தேச பக்திப் பாடல்களை - மகாகவி வல்லத்தோல், பாரதியார் பாடல்களைப் பாடிக் கொண்டும், "இன்குலாப் ஜிந்தாபாத்", "சுதந்திரம் தேவை" என்ற கோஷங்களை முழங்கிக் கொண்டும் ஊர்வலம் வருவோம். மாலை நேரங்கள் எப்பொழுதும் நாங்கள் பிஸி. இசைக்காகவும் இசையைச் சார்ந்த எதற்காகவும் எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய இளம் குழு ஒன்றை அமைத்திருந்தோம். கொச்சின் (முன்னாளில் வெலிங்டன் தீவு) துறைமுகத்தில் நிறுத்தப்படும் கப்பற்படை கப்பல்களில் மாலை நேரக் கேளிக்கைக்கு எங்கள் குழுவினர் மிகவும் டிமாண்டில் இருந்தனர். பக்த பிரகலாதா, பாமா விஜயம் உட்பட ஒரு சில நாட்டிய நாடகங்களைக் கூட தயாரித்தோம். நான் எங்கே இட்டுச்செல்கிறேன் என்று குழம்புகிறீர்களா? அந்த நாட்களில் ஆண் பிள்ளைகள் நாட்டியம், இசை, அல்லது மற்ற நுண் கலைகளைக் கற்பதில் எந்த பாகுபாடும் இருந்ததில்லை - குறிப்பாக கேரளாவில். இவற்றைத் தவிர வேறு எந்த பொழுதுபோக்கு அம்சமும் கிடையாது. பஞ்ச வாத்தியம் (drums), ஹரிகதா, ஒட்டம் துள்ளல் (ஹரிகதாவின் கிராமப்புற பரிமாணம்), கதா பிரசங்கம் (இதற்கு மட்டும் இசை பின்னுக்குத் தள்ளப்படும்) போன்றவைகள் மற்ற கலைகளுள் சில.
கர்நாடக இசைக் கச்சேரிகள் திருமணங்கள் மற்றும் கோவில் திருவிழாக்கள் ஆகியவற்றில் தான் இடம் பெற்றன. எனது குரு மறைந்த செம்பை வைத்தியநாத பாகவதர், M.A. கல்யாணகிருஷ்ண பாகவதர், G.N. பாலசுப்ரமணியம் (கர்நாடக இசை வானில் அப்பொழுது மின்னத் துவங்கிய நட்சத்திரம்), புல்லாங்குழல் மகாலிங்கம், T.K. ராதாகிருஷ்ணன் (இவரும் புல்லாங்குழல் வித்வான் தான்), பாலக்காடு ராமா பாகவதர், எனது தந்தை, வீணை தேசமங்கலம் வெங்கடேஸ்வர ஐயர் மற்றும் என்னப்பாதம் வெங்கடராம பாகவதர் (ஹரிகதா) போன்ற பல புகழ் பெற்ற பெரிய வித்வான்களுக்கு நான் பக்க வாத்தியம் வாசித்திருக்கிறேன்
நான் நிறைய நாதஸ்வர இசையைக் கேட்டிருக் கிறேன். அது மிகவும் விரும்பத்தக்கது. குறிப்பாக இசைக் கலைஞர்களாகிய எங்களுக்கு மனநிறை வைத் தரும் இசை வடிவம். எந்நாளும் சிறந்த நாதஸ்வரக் கலைஞரான திருவாடுதுறை ராஜரத்னம் பிள்ளை (மைல் நீள ஹட்ஸன் காரில் வருவார்) தனது குடும்பத்தினருடனும், தவில் வித்வான் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுடன் பங்கேற் பார். இருவரது தேவலோக இசையில் நான் மெய் மறந்து இருக்கிறேன். பல நாட்கள் வரை இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். கர்நாடக இசைத் துறையில் நாதஸ்வரம் நுழைந்தது ஒரு மௌனப் புரட்சியே. இந்த வாத்தியம் மிகவும் நளினமானது - இதில் மூன்று விதங்களில் கமகத்தைக் கொடுக்கலாம் - விரல் அசைவுகளில், காற்றின் அசைவுகளில் மற்றும் reedயைக் கட்டுப்படுத்தியும். ராஜரத்தினம் பிள்ளையின் சக்தியும் அவரது அசாத்தியக் கற்பனை வளமும் எல்லையில்லாதது போலத் தோன்றும். எந்த ராகமாக இருந்தாலும் கேட்பவர்கள் வியப்பில் ஆழ்ந்துவிடுவார்கள். ஒன்று முதல் இரண்டு மணி நேரங்கள் நாடகப் பிரியா, ரிஷபப் பிரியா, கீரவாணி மற்றும் ஏனைய ராகங்களில் கச்சேரி வழங்குவது என்பது யாரும் கேட்டறியாது மட்டுமல்ல அந்த மணித்துளிகள் மந்திரத்தில் கட்டுண்ட மணித்துளிகள் தான். இத்தகையக் கச்சேரிகளைக் கேட்க நாங்கள் பல மைல்கள் நடந்திருக்கிறோம். அந்தக் காலத்தில், கை ரிக்ஷா மற்றும் பேருந்துகள் (அதுவும் இரவு எட்டு மணி வரை தான்) தான் போக்குவரத்து வசதிகள். ஆனால் கச்சேரிகளோ இரவு 9.30க்கு பிறகு துவங்கி விடிகாலை 2 அல்லது மூன்று மணிக்கு முடியும். திருவிடைமருதூர் வீராசாமிப் பிள்ளை, திருவெண் காடு சுப்ரமணியம் பிள்ளை (இவர் தம்புராவும் மிருதங்கமும் வாசிக்கக் கூடியவர்), தவில் முத்து வீரப்பிள்ளை, பஞ்சாமிப் பிள்ளை போன்றவர்கள் மற்ற சிறந்த கலைஞர்கள். நான் பல பெயர்களைக் குறிப்பிடாமல் இருப்பதற்கு இடப் பற்றாக்குறையே காரணம். இத்தகைய சிறந்த கலைஞர்கள் நம் உள்ளத்தில், குறிப்பாக என் உள்ளத்தில் அழிக்க முடியாத அச்சினை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவரும், வளைந்து கொடுக்கும் விரல்களால் தவிலில் ஜாலங்களை நிகழ்த்தக்கூடியவருமான மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை அவர்களோடு வாசித்து வந்தார். ஆலாபனையின் போது அவர் எழுந்து நின்றுகொண்டு, இசையை கேட்டுப் பாராட்டிக் கொண்டிருப்பார். ஆலாபனைக்கு நடுவே பிள்ளை அவர்கள் ஆசுவாசப் படுத்திக்கொள்ள சிறிது நேரம் தவில் மூலம் பேசி நம்மை அசத்துவார். இன்று நாம் இவை இல்லாமல் தவிக்கிறோம்.
பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நாதஸ்வரக் கலைஞருக்கு எனது தந்தை கற்றுத் தந்திருக்கிறார் (அந்நாளில் இப்படி செய்தால் ஏதோ பாவம் செய்தது போல). அந்த திறமையான இசைக் கலைஞர் C. குமரன் பின்னர் புகழ் பெற்று, கேரளாவில் நாதஸ்வரம் வாசிக்கும் பழக்க வழக்கத்தைத் தோற்றுவித்தார். அரண்மனை இசைக் கலைஞராக எனது தந்தை இருந்ததால், எனக்குக் கற்றுக் கொடுக்க அவருக்கு நேரம் இருந்ததில்லை. அதனால் நான் குழந்தைப் பருவத்தில் குமரனிடம் தான் பல பாடல்களைக் கற்றேன். இதனால் நான் என்றும் வருத்தமோ ஏமாற்றமோ அடைந்தது கிடையாது. ஆனாலும் கூட எனது தந்தையைப் பார்க்கும் போதெல்லாம் (அது இரவு பத்து மணியாக இருந்தாலும் கூட), எனக்குக் கற்றுத் தரச் சொல்லி நச்சரிப்பேன்; அவரும் ஏற்றுக்கொள்வார். இது எனது கல்லூரி நாட்களிலும் தொடர்ந்தது.
தென்னகத்தில் சினிமாவின் தாக்கம் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய காலம் அது. சமூகக் கதைகள், புராண இதிகாசக் கதைகள், சண்டைக் காட்சிகள் எல்லாம் இடம் பெற்றன. ஆனால் சினிமாவில் இருந்த ஒரே இசை கர்நாடக சங்கீதமே! அதுவும் கூட பாரம்பரிய கர்நாடக சங்கீதமே. பாபநாசம் சிவன், M.S. சுப்புலக்ஷ்மி, D.K. பட்டம்மாள், GNB, முசிறி சுப்பிரமண்ய ஐயர், M.M. தண்டபாணி தேசிகர் (அனைவரும் கர்நாடக சங்கீத கலைஞர்களே) ஆகியோரின் கூட்டணி யோடு, P.U. சின்னப்பா, S.G. கிட்டப்பா, K.B. சுந்தராம்பாள், S.V. சுப்பைய்யா பாகவதர், ஹென்னப்பா பாகவதர், T.R. மகாலிங்கம், அகஸ்டியன் ஜோஸப், செபஸ்டியன் ஜோஸப், வைக்கம் வாசுதேவன் நாயர் மற்றும் பலர் (இவர்களில் பலருக்கு நான் சிறுவனாக இருந்தபோது பக்க வாத்தியம் வாசித்திருக்கிறேன்).
மற்றொரு பலம் வாய்ந்த கருவி கிராமபோன் 78rpm தட்டுக்கள், அந்தக் காலத்தில் மக்களிடையே பெரும் அளவில் பரவியிருந்தது. முசிறி சுப்ரமண்ய ஐயரின் "தேயிலைத் தோட்டத்திலே", "நகுமோமோ", "திருவடி சரணம்", மற்றும் பல, மகாராஜா சுவாதி திருநாளின் சங்கராபரனம் அடதாள பாத வர்ணங்கள் - எட்டுக்கடை சரணத்திற்கு சுவரத்திற்கு பதிலாக சாகித்யம் பாடியது, தோடி ராகத்தில் நாலு கலையில் ராகம் தானம் பல்லவி, கபிர்தாஸ் பஜன் மற்றும் தமிழ் மங்களம் அடங்கிய எனது குருவின் கச்சேரி ஆல்பம்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த தொகுப்பு!
தொடரும்... |