வளரும் கலைஞர் டாக்டர் கணேஷ்
சங்கீதப் பிரியர்கள் என்ன விலை கொடுத்தேனும் தங்கள் அபிமானக் கலைஞர்களின் கச்சேரியைக் கேட்க சபாக்களைத் தேடிச் செல்ல நினைக்கும் வேளையில் 'இறை இசைப் பயணம்' என்ற இயக்கத்தின் மூலம் நம் வீட்டிற்கே வந்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாடி நம்மை மகிழ்விக்கிறார் குரலிசைக் கலைஞர் டாக்டர் கணேஷ். இவர் ஒரு கால்நடை மருத்துவரும்கூட. பத்மஸ்ரீ மகாராஜபுரம் சந்தானத்தின் சிஷ்யரான இவர் வாய்ப்பாட்டில் மட்டுமல்லாது வீணை வாசிப்பதிலும் கைதேர்ந்தவர்.

காஞ்சிமடத்தின் கெளரவக் கால்நடை மருத்துவரும் ஆவார். கணேஷ் தற்போது விஸ்வப்ரியா குழு நிறுவனத்தில் பணிபுரிந்தபடியே தன் இசைப் பயணத்தைத் தொடர்கிறார்.

பின்புலம்

எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகள் அமைத்த கோடீஸ்வர ஐயர் போன்றோரின் பரம்பரையைச் சேர்ந்தவன் நான். அவருடைய மாமா கவிகுஞ்சர பாரதியாவார். கோடீஸ்வர ஐயர் சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டதால் மாமா கவிகுஞ்சர பாரதி அவரை எடுத்து வளர்த்தார். அவர்தான் இவருக்கு எப்படி இசை அமைப்பது போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்தார்.

இப்படி இவர் செய்யப் போகிறார் என்ற விஷயம் நான்கு திசைகளிலும் பரவி, பெரிய வித்வான் ஒருவர் அவரிடம் வந்து 'நீ என்ன பெரிய வித்வானா?' என்று கேலி செய்தாராம். அப்போது கோடீஸ்வர ஐயர் அவர்கள் அவரை நோக்கி, 'கானாமுத பானம் இருக்க; வேறு பானம் மேல் அபிமானம் ஏன்?' அப்படி என்று ஜோதீஸ்வரரூபிணியில் ஒரு கீர்த்தனை செய்தார். வருத்தத்துடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது கனவில் தியாகராஜர் வந்து 'நீ கவலைப்படாதே, 72 மேளகர்த்தாவில் நீ செய், நான் உனக்குத் துணையாக இருக்கிறேன்...' என்று சொன்னாராம். சில நேரம் கழித்துக் கனவில் முத்துசாமி தீட்சிதர் வந்து நான் உனக்கு துணை இருக்கிறேன், கவலைப்படாதே என்றாராம். காலையில் எழுந்தவுடனேயே தியாகராஜர் மேலே பாடல் ஒன்றைப் பாடினார்:

இனி நமக்கு ஒரு கவலையுமில்லை; என்றும் இன்பமே
புனித தியாகராஜர் சுவாமி நம் கனவில் வந்து காட்சி தந்ததால்
இனி நமக்குக் கவலையுமில்லை

அதுபோல் முத்துசாமி தீட்சிதர் மேல் 'சுவாமி தீட்சிதா சத்குரு' என்கிற கீர்த்தனையைப் பாடினார். இத்தகைய அருள்பெற்றவர் கோடீஸ்வர ஐயர். இதுதான் எங்கள் பரம்பரை.

என் குருநாதர்கள்

என் தந்தை ராதாகிருஷ்ணனுக்கும், தாயாருக்கும் இசையில் மிகுந்த ஆர்வம் உண்டு. என்னுடைய பதினாலாவது வயதில் தஞ்சாவூரில் பி. மகாலிங்க ஐயர் அவர்களிடம் இசை கற்க ஆரம்பித்தேன். அதன்பின் வித்வான் திருக்கருகாவூர் ஜி. ஸ்ரீனிவாச ராகவன் அவர்களிடமும் பின்னர் குருகுல வாச முறையில் பத்மஸ்ரீ சங்கீத கலாநிதி மகாராஜாபுரம் சந்தானம் அவர்களிடமும் தொடர்ந்து சங்கீதம் கற்றுக்கொண்டேன். தற்போது வித்வான் ஓ.எஸ். தியாகராஜனிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டு வருகிறேன். எனக்கு வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உண்டு. திருமதி ரங்கநாயகி ராஜ கோபாலிடம் வீணை கற்றுக் கொண்டேன்.

திருப்புமுனை

அது 1986-ம் ஆண்டு நடந்தது. எனக்குச் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிப்புக்கான இடம் கிடைத்தது. படிப்பிற்காகச் சென்னை வந்தேன். இசையின் மேல் இருந்த ஈடுபாட்டின் காரணமாக மகாராஜபுரம் சந்தானம் அவர்களைத் தேடிச் சென்றேன். சந்தானம் அவர்களிடம் ஆறு ஆண்டுகள் அவர் வீட்டிலேயே தங்கிப் பாட்டு கற்றுக் கொண்டேன். இது என் வாழ்வில் நான் செய்த பெரும் பாக்கியம்.
1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி அன்று சென்னை கிருஷ்ணகான சபாவில் என் குருநாதர் மகாராஜபுரம் சந்தானத்துடன் சேர்ந்து முதன்முதலில் மேடையில் பாடினேன். அதற்குப்பின் பல கச்சேரிகளில் நான் அவருடன் பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தது.

குருவின் சிபாரிசில் வேலை

நான் என் கால்நடை மருத்துவப் படிப்பை முடித்தவுடன் பல இடங்களில் வேலை தேடி அலைந்துக் கொண்டிருந்தேன். ஒருபுறம் பாட்டு, ஒரு புறம் வேலை தேடும் படலம் என்று என் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. என் குரு மகாராஜபுரம் அவர்களுக்கு நான் அவரை விட்டு எங்கும் போகக் கூடாது என்று நினைத்தார். அப்போது ஒருநாள் 'விஸ்வப்ரியா க்ரூப்' நிறுவனத்தின் தலைவர் விஸ்வநாதன் அவர்கள் குருநாதரைக் காண வந்தார். தங்கள் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராகப் பதவி ஏற்க வேண்டும் என்று கேட்டனர். உடனே என் குரு அவரிடம், ''என் சிஷ்யன் கணேஷிற்கு உங்கள் நிறுவனத்தில் வேலை தருவதாக இருந்தால் நான் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்கிறேன்...'' என்று சொன்னார். இன்று நான் இந்நிறுவனத்தில் பணிசெய்வதற்குக் காரணம் என் குருதான்.

1992-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி மயிலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸில் கச்சேரி செய்தேன். இதைத் தொடர்ந்து எனக்குப் பல மேடைகளில் பாடுகிற வாய்ப்புகள் வந்தன. இன்றும் செய்து கொண்டிருக்கிறேன்.

மறக்க முடியாதவை

டாக்டர் டி.கே. மூர்த்தி, மிருதங்க சக்கரவர்த்தி உமையாள்புரம் சிவராமன், வேலூர் ராமபத்ரன், திருவாரூர் பக்தவத்சலம், வி. தியாகராஜன், நாகை முரளிதரன், திருமதி ருக்மணி, சிக்கல் பாஸ்கரன் என்று பல பிரபலங்களுடன் சேர்ந்து பாடியிருக்கிறேன்.

கடந்த 1995-ல் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 70-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பாடியது எனக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக கருதுகிறேன். புட்டபர்த்தியில், பிரசாந்தி நிலையத்தில் பாபாவின் முன் நான் பாடிய அந்த நிகழ்ச்சியைத் தொலைக் காட்சியில் நேரடியாக நாடு முழுவதும் ஒளிப்பரப்பினார்கள்.

தென்னப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாய் என்று பல்வேறு நாடுகளுக்குப் பல தடவை சென்று கச்சேரி செய்திருக்கிறேன்.

விஸ்வப்ரியாவின் இசைத் தொண்டு

இசைக்கு எங்கள் நிறுவனம் ஆற்றும் தொண்டு சிறப்பானது. பிற நிறுவனங்கள் வருடாவருடம் வாடிக்கையாளர்களுக்குக் காலண்டர் டயரி கொடுப்பது வழக்கம். ஆனால் எங்கள் நிறுவனம் பல இசைக் கலைஞர்களைக் கொண்டு புரந்தரகானா மிருதம், நவகிரக கீர்த்தனைகள், கணபதி கானமாலா என்று ஒலிநாடாக்கள் தயாரித்து, முதலீடு செய்பவர்களுக்கும், வாடிக்கை யாளர்களுக்கும் வழங்குகிறது. நான் பாடிய 'குருகாணிக்கை', 'குருவே சரணம்', 'ராகமாலிகா', 'பக்தி பரவசம்' ஆகிய ஒலிநாடாக்களை வெளியிட்டது.

இந்த வருடம் நடராஜரைப் பற்றிய 'சிதம்பரம்' என்ற தொகுப்பை வெளியிட்டோம். இதில் விஜயசிவா, சிக்கில் குருசரண், ஓ.எஸ். அருண் மற்றும் நான் பாடியுள்ளோம். இதைச் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் சிவராத்திரி அன்று 'சிவார்ப்பணம்' என்கிற பெயரில் ஒரு மணிநேர நிகழ்ச்சியாகத் தயாரித்து அளித்தார்கள்.

மறக்க முடியாத நாள்

என் குரு மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் எல்லா இசை நிகழ்ச்சியிலும் நானும் கூடப் பாடச் செல்வேன். கச்சேரி முடிந்தவுடன் அவருடனேயே காரில் திரும்பி வருவது வழக்கம். 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி கும்பகோணம் அருகிலுள்ள மஞ்சக்குடி என்ற இடத்தில் கச்சேரி செய்வதற்காகச் சென்றோம். வழக்கத்துக்கு மாறாக அன்று கச்சேரி முடிந்தவுடன் அவர் என்னை பஸ்ஸில் போகும்படிச் சொன்னார். நானும் பஸ்ஸில் வந்துவிட்டேன். மறுநாள் ஜூன் 24-ம் தேதி காலை குருநாதரின் கார் விபத்துக்குள்ளாகி, அந்த இடத்திலேயே அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது.

ஸ்ரீ மகாராஜபுரம் சந்தானம் ரசிகர்கள் அறக்கட்டளை

என் குருவின் மறைவுக்குப் பிறகு ஜுன் 23-ம் தேதி தோறும் அவரது நினைவாக இசைக் கச்சேரி ஒன்றை நடத்த ஆரம்பித்தேன். இதை இன்னும் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து 'ஸ்ரீ மகாராஜபுரம் சந்தானம் ரசிகர்கள் அறக்கட்டளை' என்கிற ஓர் அமைப்பை உருவாக்கினேன். இந்த அறக்கட்டளையில் என் தந்தை ராதாகிருஷ்ணன், ரேணுகா பார்த்தசாரதி, அலுமேலு சுரேஷ், கோவிந்தராஜன் போன்றவர்கள் அறங்காவலர்களாக உள்ளனர். எங்களின் இந்த அமைப்பின் மூலம் பல்வேறு இசைத்தொண்டுகளை நாங்கள் செய்து வருகிறோம். முக்கியமாக என் குரு மகாராஜபுரம் சந்தானத்தின் இசை பாணியை இன்றைய இளம் தலைமுறைக் கலைஞர்களிடம் பரப்புகிறோம்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 17 முதல் ஜுலை 23 வரை தொடர்ந்து 6 நாட்கள் கச்சேரிக்கு ஏற்பாடு செய்கிறோம். இதனை சென்னையைத் தவிரத் தமிழகத்தில் இன்னும் ஆறு இடங்களில் நடத்துகிறோம். இதற்காக இசைக் கலைஞர்களையும், பக்கவாத்தியக்காரர்களையும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அதற்கான செலவுகள் முழுவதையும் அறக்கட்டளையே ஏற்றுக் கொள்கிறது. 'மகாராஜபுரம் சந்தானம் என்கிற மாபெரும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை தியாகராயநகரில் உள்ள கிரிஃபித் சாலையை 'மகாராஜபுரம் சந்தானம் சாலை'யாக எங்கள் அறக்கட்டளையின் மூலம் மாற்றினோம். அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் இதற்குப் பெரிதும் உதவினார்.

ராகவேந்திரர் பிறந்த தினமான மார்ச் 17-ம் தேதியன்று 'நாதஹாரம்' என்ற நிகழ்ச்சியை நடத்தினோம். உலக அளவில் இந்த மாதிரி இதுவரை நிகழ்ந்ததில்லை என்றே சொல்ல வேண்டும். சென்னையிலிருந்து 108 இசைக் கலைஞர்களை அழைத்துக் கொண்டு மந்திரலயாத்திற்கு சென்றோம். அத்தனைக் கலைஞர்களும் ஒரே மாதிரி ஆடை அணிந்து கொண்டு மந்திராலயாவின் பிரகாரத்தைச் சுற்றி அமர்ந்து தியாக ராஜரின் பஞ்சவர்ணக் கீர்த்தனைகளைப் பாடினார்கள். ராகவேந்திரரின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அங்கு எங்களை வந்து இத்தகைய நிகழ்ச்சிகளை வழங்க அழைத்திருக்கிறார்கள்.

டி.கே. கோவிந்தராவ், டி.கே. நாராயண ஸ்வாமி, கே.ஆர். சாரநாதன் என்று வாய்ப்பாட்டு கலைஞர்களும், சித்தூர் வெங்கடேசன், ஸ்ரீதர், பிரபஞ்சம் பாலசந்திரன் போன்ற புல்லாங்குழல் கலைஞர்களும் மற்றும் பிரபல வயலின், வீணை, மிருதங்கக் கலைஞர்களும் கலந்து கொண்டனர். எல்லாத் துறைகளிலும் பெரிய வித்வான்கள் வந்து இலவசமாக கைங்கரியம் செய்து விட்டு சென்றார்கள்.

கலைஞர்கள் கையேடு

பிரபல மற்றும் வளரும் கலைஞர்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள் போன்ற விவரங்கள் எல்லோருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த விவரங்கள் அடங்கிய கையேடு ஒன்றை எங்கள் அறக்கட்டளையின் மூலம் தயாரித்து வெளியிட்டோம். 1998-ல் தொடங்கித் தொடர்ந்து மூன்று வருடங்கள் கையேடு தயாரித்து வழங்கினோம். தற்போது முத்ரா பாஸ்கர் அவர்கள் இப்பணியைச் செய்கிறார்.

குஜராத் பூகம்பம்

குஜராத் பூகம்பத்தால் மக்கள் வீடு இழந்து, பொருள் இழந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், உதவி நிதி திரட்டும் பொருட்டு நாரதகான சபாவில் மிகப் பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தோம். லால்குடி ஜெயராமனும் அதில் பங்கேற்று வாசித்தார். அவர் இப்போதெல்லாம் கச்சேரிகளில் வாசிப்பதில்லை. இருந்தாலும் குஜராத் மக்களுக்காக அன்று பங்கேற்றார். இதை கேள்விப்பட்ட காஞ்சிப்பெரியவர் தானும் வருவதாக என்னிடம் கூறினார்.

கச்சேரியில் யாரிடமும் நாங்கள் பணம் வாங்கவில்லை. எல்லோரிடமும் வங்கிக் காசோலை, வரைவோலையை 'Prime Minister's Relief Fund' என்ற பெயரில் பெற்றுக்கொண்டோம். அன்று மட்டும் 5.32 லட்சம் ரூபாய் வசூல் ஆனது. அன்றைய மத்திய மந்திரி வெங்கையா நாயுடு எங்களை மிகவும் பாராட்டிப் பேசினார்.

நூதன நிகழ்ச்சிகள்

'சிவசபா' என்கிற அமைப்பின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் கடற்கரையில் 1 கோடி 'ஓம் நமசிவாய' என்கிற மந்திரத்தைச் சொல்கிறோம். இதன் மூலம் உலகத்திற்கு சுபிட்சத்தை வேண்டுகிறோம். இந்நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு நிறையப் பாடல்களை பாடியுள்ளேன். அதுமட்டு மல்லாமல் கடந்த சில வருடங்களாக இரண்டு வயலின், இரண்டு மிருதங்கங்களுடன் 108 ராகத்தில் 'ஓம் நமசிவாய' என்று சிவகோஷம் செய்து வருகிறேன். ஊத்துக்காடு வெங்கடசுப்பய்யரின் நவா வர்ணகீர்த்தனையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளைச் செய்துள்ளேன்.

இறை இசைப் பயணம்

எனக்கு இசையைக் கற்கவும், பாடவும் வாய்ப்புக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக 'இறை இசைப் பயணம்' என்ற ஒன்றை நான் தொடங்கி, இப்போதும் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறேன்.

குகஸ்ரீ காமாட்சி சுந்தரேச ஸ்வாமிகள் என்பவர் 'குகஸ்ரீ சுவாமிகள் சத்சங்கம்' என்கிற அமைப்பை நிறுவிப் பாழடைந்த பல கோயில்களை சீர் செய்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நன்மங்கலத்தில் உள்ள காமாட்சி ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலின் ராஜகோபுரத்தை இவர் கட்டியுள்ளார். தற்போது பூந்தமல்லி அருகில் மெய்ப்பேடு என்னும் ஊரில் சிங்கிஸ்வரர் என்கிற சிவன் கோயிலைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இத்திருக் கோயிலின் திருப்பணிக்காக எங்கள் 'இறை இசைப் பயணத்தின்' மூலம் சங்கீதத்தில் ஆர்வமுள்ளவர்கள் வீடுகளுக்குச் சென்று கச்சேரிகளை செய்கிறோம். கச்சேரி இரண்டு மணி நேரம் நடக்கும். இதுவரை 30 கச்சேரிகள் நடத்தியிருக்கிறோம். சுமார் ஐந்தரை லட்ச ரூபாயை இப்படித் திரட்டியுள்ளோம்.

நான் ரசிகர்களின் வீடுகளுக்குச் சென்று கச்சேரி செய்வது பெரிய இசைக் கலைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், இசைப் பிரியர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இறைவனின் திருப்பணிக்காகச் செய்யும் இத்தொண்டு என் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

சங்கீத சேவா டிரஸ்ட்

நலிந்தக் இசை கலைஞர்களுக்குப் பல உதவிகள் செய்து வருகிறோம். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொடுக்கிறோம். எங்களுக்கு அருண் எக்ஸல் பவுண்டேஷன், ஸ்ரீராம் குரூப்ஸ் நிறுவனம், பெப்சி, நியூ இந்தியா இன்ஷ¥ரன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதற்காக எங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

இசைக் கலைஞர்களுக்கு சமுதாய பாதுகாப்புக் கிடையாது. அவர்கள் நெல்லிக்காய் மூட்டைபோல் இருக்கிறார்கள். அவர்களின் சமூக நலன், கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு 2004 மே மாதம் 14-ம் தேதி அன்று 'சங்கீத ஸேவா டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையைத் தொடங்கினோம். இதற்கு நாரத கான கிருஷ்ணசாமி அவர்கள் அறங்காவலர். ஓர் இசைக்கலைஞரின் அகால மரணமோ, தொடர்ந்த உடல் நலக் குறைவோ, விபத்தினால் ஏற்படும் ஊனமோ அவரது குடும்பத்திற்கு ஏற்படுத்தும் மிகப் பெரிய நிதித் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ரூபாய் ஒன்றரை லட்சத்திற்கு எல்.ஐ.சி.யின் கூட்டுக் காப்பீட்டுத் திட்டம் வழியே சங்கீத ஸேவா டிரஸ்ட் வழங்க உத்தேசித்துள்ளது. கடம் சுரேஷ், நான், பாலசங்கர் மூவரும் சேர்ந்து இதை ஆரம்பிப்பதற்கான கருத்தை அளித்தோம். தியாகராஜர் பிறந்த நாளன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த டிரஸ்ட்டில் தற்போது சுமார் 150 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.

பட்டங்கள்

முதன்முதலாக எனக்குக் கிடைத்த பட்டம் 'சங்கீத சிந்தாமணி' என்பதாகும். இதற்குப் பிறகு 'யுவகலா பாரதி' (பாரத் கலாச்சார்), 'இசை அரசர்' (பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை), 'சங்கீத ஞானமணி' (குகஸ்ரீ காமாட்சி சுந்தரேச ஸ்வாமிகள்) 'மகாராஜாபுரம் சந்தானம் விருது' இன்னும் பல விருதுகள் கிடைத்தன. மியூசிக் அகாதமியின் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞருக்கான விருது மூன்று முறை கிடைத்துள்ளது. தவிர நிறையப் பரிசுகள் பெற்றுள்ளேன்.

பிரபல மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் இன்றைய இளம் தலைமுறைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தொடர்ந்து மிருதங்கம் வாசித்து வருகிறார். அவர்களுள் நானும் ஒருவன். இது எனக்கு மிகப் பெரிய பெருமைதரும் விஷயம் ஆகும். தொடர்ந்து என்னுடைய கச்சேரிகளுக்கு அவர் மிருதங்கம் வாசிக்கிறார்.

குடும்பம்

அப்பா ராதாகிருஷ்ணன் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். அம்மா இசை ரசிகை. என் பெற்றோர்கள் என் இசைக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். எனக்கு இரண்டு மூத்த சகோதரியும், ஒரு இளைய சகோதரியும் இருக்கிறார். அவர்களும் நன்றாகப் பாடக்கூடியவர்கள். அவர்களுக்கு நான் வீணை வாசித்திருக் கிறேன். திருமணத்திற்குப் பின் என் சகோதரிகளால் பாட்டைத் தொடர முடியாமல் போய்விட்டது. என் மனைவி தீபா நன்றாக பாடுவார். வயலின் வாசிப்பார். அவர் நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் சிஷ்யை. எங்களுக்கு ஒரே பெண் குழந்தை. ராஜீவி என்று பெயர். அவளுக்கும் பாட்டில் ஈடுபாடு உள்ளது.

நன்றி

விளையாட்டுக்கு நம் அரசுகள் கொடுக்கும் சலுகைகளும், முக்கியத்துவமும் இசைக் கலைக்குக் கிடைப்பதில்லையே என்ற ஆதங்கம் நிறையவே டாக்டரின் மனதில் குடிகொண்டுள்ளது அவரது பேச்சில் நமக்குத் தெரிகிறது. தனது பணிகளுக்கெல்லாம் உறுதுணையாக இருக்கும் விஸ்வப்ரியா நிறுவனத்துக்கும் தென்றலுக்கும் தனது நன்றியைக் கூறி விடைபெறுகிறார் டாக்டர் கணேஷ்.

சந்திப்பு:கேடிஸ்ரீ
தொகுப்பு:மதுரபாரதி

© TamilOnline.com