குடந்தை என்னும் கும்பகோணம், தமிழ்நாட்டில் தஞ்சைக்கு அருகில் உள்ளது. இங்குள்ள சாரங்கபாணிப் பெருமாள் திருக்கோவில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 18வது திவ்ய தேசமாகும். ஆண்டாள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது. மூலவர் திருநாமம் சாரங்கபாணி, ஆராவமுதன். தாயார் திருநாமம் : கோமளவல்லி. தீர்த்தங்கள் - ஹேமவல்லி புஷ்கரணி, காவிரி, அரசலாறு. கோவிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் தவிர அநேக தீர்த்தங்கள் உள்ளன.
ஹேமரிஷி பொற்றாமரைக் குளத்தின் கரையில் விஷ்ணுவின் மனைவி லக்ஷ்மியை மகளாக அடையத் தவம் புரிந்தார். தவத்தை மெச்சிய விஷ்ணு, ஹேமரிஷிக்கு, லக்ஷ்மி தேவி, மகளாகப் பிறக்க அனுக்கிரகம் செய்தார் பொற்றாமரைக் குளத்தில் ஆயிரம் தாமரை மலர்களுக்கிடையே லக்ஷ்மி தேவி தோன்றியதால் கோமளவல்லி என அவர் அழைக்கப்பட்டார். மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இருந்து ஆராவமுதனாக குதிரைகள், யானைகள் கூடிய ரதத்தில் வந்திறங்கி லக்ஷ்மியை மணந்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால் சாரங்கபாணி என்ற பெயரைப் பெற்றார்.
திவ்யப்பிரபந்தப் பாடல்களை நாதமுனிகள் தொகுக்க முயன்றபோது 12 ஆழ்வார்கள் பாடிய ஓராயிரத்துப் பத்து பாடலில் பத்து வரியைப் பாடிய பக்தர்களிடம் மீதி ஆயிரம் எங்கே எனக் கேட்க, அவர்கள் 'தெரியாது' என்றனர். பெருமாள் நாதமுனியின் கனவில் தோன்றி, ஆழ்வார் திருநகரிக்குச் சென்று நம்மாழ்வாரை வணங்கினால் மீதி கிடைக்கும் என்றார். அவ்வாறே அத்தலத்திற்குச் சென்று நம்மாழ்வாரை வணங்க, ஆயிரம் பாடல்கள் கிடைக்கும் என நினைத்த நாதமுனிக்கு 4000 பாடல்கள் கிடைத்தன. நாதமுனி நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்ற நூலைத் தொகுத்தார் ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுக்கக் காரணமாக இருந்தவர் என்பதால் சாரங்கபாணிக்கு 'ஆராவமுது ஆழ்வார்' என்ற பெயரும் உண்டானது.
சுவாமி தேரில் வந்ததால் சன்னிதி தேர் அமைப்பில் உள்ளது. பெருமாள் உத்தான சயனக் கோலத்தில் பள்ளி கொண்டுள்ளார். திருமழிசை ஆழ்வார் இத்தலம் வந்து பெருமாளை வணங்கி மங்களாசாசனம் செய்தபோது "நடந்த கால்கள் வலிக்கிறது எனப் பள்ளி கொண்டிருக்கிறாயா?" என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். அவரது அருளைக் கண்ட திருமழிசை ஆழ்வார் மகிழ்ந்து 'அப்படியே காட்சி கொடு' என்றார். சுவாமியும் அவ்வாறே காட்சி தந்தார்.
முழுமையான சயனத்தில் இல்லாமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை 'உத்தான சயனம்' என்பர். இத்தலம் தாயாரின் பிறந்த வீடாகும். பெருமாள் தாயாரை மணந்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். இங்கு தாயார் சன்னிதிக்கு வந்து வழிபட்ட பின்பே பெருமாள் சன்னிதியை அடையும் வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடை திறக்கும்போது கோமாதா பூஜை தாயார் சன்னிதியில் நடந்த பின்னரே, பெருமாள் சன்னிதியில் நடக்கிறது.
குடந்தை நகரில் இந்தக் கோயில்தான் பெரிய விஷ்ணு கோயில். உயர்ந்த ராஜகோபுரங்கள். கோயிலைச் சுற்றிலும் பெரிய மதில் சுவர். கோவிலினுள் அநேக தீர்த்தங்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. 173 அடி உயரத்தில் ஏழடுக்கு ராஜகோபுரம், ஐந்து சிறிய கோபுரங்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. பொற்றாமரைக்குளம் மேற்கு நுழைவாயில் பக்கம் உள்ளது. மூலவர் சன்னதியில் பள்ளிகொண்ட கோலத்தில் வலது கைப்பக்கம் தலையைச் சாய்த்த நிலையில் காட்சி தருகிறார் எம்பெருமான். நாபியில் பிரம்மா, தலைப்பகுதியில் சூரியன் உள்ளார். ஹேமரிஷி, லக்ஷ்மி, உற்சவர் சிலைகள் காட்சி அளிக்கின்றன. கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதாரச் சிலைகள் அருமையாகச் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகம் செல்ல இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. உத்தராயண வாசல், தக்ஷிணாயன வாசல் என அவை அழைக்கப்படுகின்றன. ஜனவரி 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை உத்தராயண வாசலும், அடுத்த ஆறு மாதம் தக்ஷிணாயன வாசலும் திறக்கப்படுகிறது. மரத்தினால் ஆன தேர் ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ளது.
பரதநாட்டியத்தில் விளங்கும் 108 கரண முத்திரைகளில் சிலவற்றை கோவில் சுவர் சிற்பங்களில் காண முடிகிறது. 11 நிலைகள் கொண்டு 150 அடி உயரத்தில் தேர் வடிவில் சன்னதி அமைந்துள்ளது. இவ்வமைப்பு சித்திரத்தேர் எனப்படும். இத்தேரின் சிறப்பை ரத பந்தமாக திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். கருவறைக்கு முன் சந்தான கிருஷ்ணர் அருள் புரிகிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
லக்ஷ்மிநாராயணர் என்னும் பக்தர் பெருமாள்மீது தீவிர பக்தி கொண்டவர். இவர் இக்கோயிலின் கோபுரத்தைக் கட்டினார். அவருக்குக் குழந்தை இல்லை. இறுதிக் காலம்வரை கோவிலில் சேவை செய்தார். ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடி அடைந்தார். இறுதிச்சடங்கு செய்யக் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெருமாள் தானே பக்தனுக்கு மகனாக இருந்து, இறுதிச் சடங்குகளைச் செய்தார். மறுநாள் காலை கோயிலைத் திறந்தபோது சாரங்கபாணிப் பெருமாள் ஈரவேஷ்டி, இடவலம் மாறிய பூணூல், தர்ப்பைகளுடன் ஈமக்கிரியை செய்து முடித்த திருக்கோலத்தில் காட்சி தந்தார். தன் பக்தனுக்காக பெருமாள் ஈமக்கிரியை செய்து கருணை புரிந்தார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் பெருமாள், பக்தனுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது ஆனால், பக்தர்கள் யாரும் பார்க்கமுடியாது. பெருமாளின் கருணை உள்ளம், பக்தனின் தீவிர பக்தி யாவும் மறக்க முடியாத உண்மை.
கோவிலில் தினமும் ஆறுகால பூஜை நடக்கிறது. சித்திரைத் திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மகத்தில் தெப்பம், அட்சய திருதியை அன்று 12 கருடசேவை, உரியடி உற்சவம், நவராத்திரி, தீப உற்சவம், மாசி மகப் பெருவிழா, பங்குனியில் திருக்கல்யாண உற்சவம் யாவும் விமரிசையாக நடைபெறுகின்றன. 12 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் திருவிழாவின் போது சாரங்கபாணி கோவில், சக்கரபாணி கோவில், ராமசாமி கோவில், ராஜகோபால சுவாமி கோவில், வராகப் பெருமாள் கோவில் ஆகிய ஐவரும் மகாமகக் குளக்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.
பாலாலிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமென் குழல்மேல் சூட்டீரே
- ஆண்டாள்
சீதா துரைராஜ் |